ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கு எதிரான போட்டி, இலங்கையில் நடைபெறுவது தங்களுக்கு சாதகம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சூப்பர் 4 சுற்று:
6 நாடுகள் பங்கேற்ற ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடி வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் சூப்பர் 4 சுற்றில் நாளை மீண்டும் மோத உள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி:
கொழும்புவில் நாளை நடைபெற உள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியாவது முழுமையாக நடைபெறுமா என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த போட்டியில் வென்று சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் கேப்டன் பேட்டி:
போட்டியை முன்னிட்டு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நாங்கள் தொடர்ந்து விளையாடி வருகிறோம். இது இந்தியாவை விட வெற்றி வாய்ப்பு எங்களுக்கு அதிகமாக இருப்பதை காட்டுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் இலங்கையில் கிரிக்கெட் விளையாடி வருகிறோம். டெஸ்ட் போட்டி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடினோம், அதன் பிறகு லங்கா பிரீமியர் லீகிலும் விளையாடினோம்... அதனால் எங்களுக்கு ஒரு கூடுதல் சாதகம் உள்ளது” என பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சவாலை தகர்க்குமா இந்தியா?
லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில், நாளை நடைபெற உள்ள போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், கோலி மற்றும் ரோகித் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இந்த இருவரின் செயல்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், கடந்த போட்டியில் பாகிஸ்தானின் மிரட்டலான பந்துவீச்சை, நடுகள வீரர்களான இஷான் கிஷன் மற்றும் பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மழைக்கு வாய்ப்பு:
இதனிடையே கொழும்பில் நாளையும் மழை பெய்யலாம் என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை நெருக்கடியை கருத்தில் கொண்டு ஒரு நாள் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மழை காரணமாக ஒருவேளை நாளை போட்டி பாதிக்கப்பட்டாலும், திங்கட்கிழமை இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.