IND Vs NZ W World Cup: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில், இந்தியா கடைசியாக விளையாடிய மூன்று லீக் போட்டிகளிலும் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - நியூசிலாந்து பலப்பரிட்சை:
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், முதலில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், அதற்கடுத்த களம் கண்ட மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வி கண்டு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் அவசியமாகும். ஒருவேளை தோல்வியுற்றால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட பாதியாக குறைந்துவிடும் என்பதால் போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புள்ளிப்பட்டியலில் அணிகளின் நிலவரம்
லீக் சுற்றில் இரு அணிகளும் இதுவரை தலா 5 போட்டிகளில் களம் கண்டுள்ளன. அதில் இந்திய அணி 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை ஈட்டி, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. அதேநேரம், நியூசிலாந்து அணியோ ஒரு வெற்றி மற்றும் 2 ட்ராக்களுடன் 4 புள்ளிகளை ஈட்டி, ஐந்தாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, நவி மும்பையில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இதன் நேரலையில் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
இந்திய அணியின் பலம், பலவீனம்:
இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. பேட்டிங் யூனிட் சரியாக செயல்பட்டால் பந்துவீச்சில் கோட்டை விடுகின்றனர். பவுலின் யூனிட் சரியாக செயல்பட்டால் டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பி விடுகிறது. வெற்றியின் விளிம்பில் இருந்தும் வாய்ப்பை கோட்டைவிட்டது, இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதில் தடுமாறி வருவதே, உள்ளூரில் போட்டிகள் நடந்தும் ஹாட்ரிக் தோல்வியை தழுவும் நிலைக்கு காரணமாகி உள்ளது. எனவே முந்தைய போட்டிகளில் இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை வசப்படுத்த முடியும். லீக் சுற்றில் தாங்கள் விளையாடிய பல போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டதால், இன்றைய போட்டியில் முழுமையாக செயல்பட்டு வெற்றி பெற நியூசிலாந்து அணி தீவிரம் காட்டி வருகிறது.
நவி மும்பை மைதானம் எப்படி?
நவி மும்பை மைதானமானது பொதுவாகவே நல்ல பவுன்ஸ் மற்றும் சீரான வேகத்தை வழங்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்களை சேர்க்க முடியும். ஆடுகளத்தில் பெரும்பாலும் எந்த தாக்கமும் இருக்காது என்பதால், அதிகப்படியான ரன்களை சேர்க்க முடியும். ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை நகரச் செய்ய முடியும். மத்திய மற்றும் இறுதி கட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். டாஸ் வென்றால் பந்துவீச்சை தேர்வு செய்வதே நல்ல முடிவாக இருக்கும்.
நேருக்கு நேர்:
இரு அணிகளும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை 57 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 22 முறையும், நியூசிலாந்து அணி 34 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (வி.கே.), அமன்ஜோத் கவுர், சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்
நியூசிலாந்து: சூசி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டெவின் (கே), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், லியா தஹுஹு, ஈடன் கார்சன்