IND Vs AUS 2nd ODI: 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க, இனேறைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரிட்சை:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வென்று, தொடரை வெல்லும் வாய்ப்பை நீட்டிக்க இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இதனால் இன்றைய போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு, இரு அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்க உள்ளது. இதன் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
மாஸ் காட்டுமா ரோகித் - கோலி கூட்டணி?
முதல் போட்டியில் டாப் ஆர்டர் வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணமானது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் 8 ரன்களுக்கும், கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியை அளித்தனர். ஆஸ்திரேலிய அணியின் வலுவான பந்துவீச்சை புறந்தள்ளி இந்தியா வெற்றி பெற வேண்டுமானால், அனுபவம் வாய்ந்த வீரர்களான ரோகித் மற்றும் கோலி இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும். அதனை பின்பற்றி கில், ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஆகியோரும் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேநேரம், ஆஸ்திரேலிய அணி உள்ளூர் சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா: நேருக்கு நேர்
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 152 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலிய அணி 84 முறையும், இந்திய அணி 58 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. இதனிடையே, கடந்த 17 ஆண்டுகளில் ஒருமுறை கூட அடிலெய்ட் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியே அடைந்ததில்லை. கடைசியாக 2008ம் ஆண்டுக்குப் பிறகு இந்த மைதானத்தில் களமிறங்கிய ஒருமுறை கூட இந்திய அணி தோல்வியுற்றதே இல்லை.
அடிலெய்ட் ஓவல் மைதானம் எப்படி?
அடிலெய்ட் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கான சொர்க்கபுரியாக திகழ்கிறது. சரியான டைமிங் மற்றும் ப்ளேஸ்மெண்டிற்கு பலனளிக்கும் வகையில் நல்ல, மிருதுவான அவுட்-ஃபீல்டையும் கொண்டுள்ளது. பவர்பிளேவில் பேட்ஸ்மேன்கள் தைரியமாக தங்களது ஷாட்களை விளையாடி, அணிக்கு அட்டகாசமான தொடக்கத்தை வழங்கலாம். போட்டி முன்னேறி செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். மிதமான வேகம் கொண்ட பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை போக்கை மாற்றக்கூடும். ஷார்ட் ஸ்கொயர் பவுண்டரிகள் இருப்பதால், வேகப்பந்து வீச்சாளர்கள் சிறிய தவறு செய்தாலும் கடுமையான சேதாரங்களை எதிர்கொள்ள நேரிடும்.
இன்றும் மழையா?
முதல் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால் போட்டி 26 ஓவர்களுக்கு சுருக்கப்பட்டது. ஆனால், இன்றைய போட்டியின் போது அடிலெய்டில் மழைக்கு வாய்ப்பே இல்லை என கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 19 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 9 டிகிரி செல்சியஸும் வெப்பம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: சுப்மன் கில் (கே), ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கே), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மேத்யூ குஹ்னேமன், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க்