ICC Womens World Cup: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்து இருப்பதால், இந்தியாவின் அரையிறுதிக் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

Continues below advertisement

ஹாட்ரிக் தோல்வி:

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா மற்று இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இந்தூரில் மோதின. டாஸ் வென்று பேட்டிங் செய்த எதிரணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஹீதர் நைட் 109 ரன்களையும், எமி ஜோன்ஸ் 58 ரன்களையும் விளாசினர். இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீராங்கனையான ப்ரதிகா ராவல் 6 ரன்களுக்கும், அவரை தொடர்ந்து வந்த ஹர்லீன் தியோல் 24 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனாலும் ஸ்மிருந்தி மந்தனா 88 ரன்கள், கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 70 ரன்கள் மற்றும் தீப்தி சர்மா 50 ரன்களும் சேர்க்க அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனால் இந்திய அணியின் வெற்றி உறுதி என கருதப்பட்டது. ஆனால், மேற்குறிப்பிடப்பவர்கள் தவிர மற்றவர்கள் கடைசி நேரத்தில் சொதப்பினர். இதனால் கடைசி நேரத்தில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி கண்டது.

Continues below advertisement

அரையிறுதிக்குள் நுழையுமா இந்திய அணி?

உள்ளூரில் போட்டிகள் நடைபெறுவதால் அந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, இந்திய அணி தனது முதல் உலகக் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன்படி, லீக் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. ஆனால் அதை தொடர்ந்து நடைபெற்ற தென்னாப்ரிக்க,  ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி மூன்று அணிகளுக்கு எதிரான லீக் சுற்று போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது. இதனால், வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய அணிகள், தலா 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களில் உள்ளன. இதனால், எந்தவித பிரச்னையும் இன்றி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. 

இந்திய அணிக்கான வாய்ப்புகள் என்ன?

லீக் சுற்றில் அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளில், நவி மும்பையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. அரையிறுதிப் போட்டிக்குள் நுழைய வரும் வியாழனன்று நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள போட்டியில், கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழல் நிலவுகிறது.

  • 2 போட்டிகளிலும் வென்றால்.. மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இந்திய அணி எட்டு புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெறுவார்கள்.
  • இரண்டிலும் தோற்றால்.. நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளிடமும் தோற்றால், இந்திய அணி நான்கு புள்ளிகளுடன் லீக் சுற்றை முடிக்கும், அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
  • நியூசிலாந்தை வீழ்த்தி, வங்கதேசத்திடம் தோற்றால் என்ன நடக்கும்? இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தினால் பட்டியலில் ஆறு புள்ளிகளைப் பெறும். ஆனால் வங்கதேசத்திடம் தோற்று, அதேநாளில் நடைபெறும் மற்றொரு போட்டியில் நியூசிலாந்து இங்கிலாந்தை வீழ்த்தினால், ரன் ரேட் இறுதி முடிவை தீர்மாணிக்கும்.
  • இந்தியா நியூசிலாந்திடம் தோற்று வங்கதேசத்தை வீழ்த்தினால் என்ன நடக்கும்? இந்தியா நியூசிலாந்திடம் தோற்றால், ஞாயிற்றுக்கிழமை வங்கதேசத்தை வெல்ல வேண்டும். ஆனால், சிறந்த ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேற முயற்சிக்க, நியூசிலாந்தை இங்கிலாந்து அணி வீழ்த்த வேண்டும் என்ற தேவை ஏற்படும்
  • இந்தியா vs நியூசிலாந்து போட்டி கைவிடப்பட்டால்? நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டால், இரு அணிகளும் ஐந்து புள்ளிகளுடன் இருக்கும். ஆனால், நேர்மறையான நிகர ரன் விகிதத்தின் காரணமாக இந்தியா நியூசிலாந்தை விட முன்னிலையில் இருக்கும்.

உள்ளூர் சூழலில் முதல் உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதிக்கு நுழைவதே சிரமமாக மாறியிருப்பது இந்திய ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.