அயர்லாந்தின் டப்ளினில் தற்போது நடைபெற்று வரும் 2வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் – ருதுராஜ் ஆட்டத்தை தொடங்கினர்.


ஜெய்ஸ்வால், திலக்வர்மா ஏமாற்றம்:


ஆட்டம் தொடங்கியது முதலே ருதுராஜ் நிதானமாக ஆட ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார். லிட்டில் வீசிய 2வது ஓவரில் 1 பவுண்டரி, 1 சிக்ஸரை விளாசினார். தொடர்ந்து அதிரடியாக ஆட முயற்சித்த ஜெய்ஸ்வால் சிக்ஸருக்கு அடித்த பந்தை எல்லைக்கோட்டு அருகே நின்ற காம்பெர் அபாரமாக கேட்ச் பிடித்தார். இதையடுத்து, ஜெய்ஸ்வால் 11 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.




பின்னர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய திலக் வர்மா களமிறங்கினார். கடந்த போட்டியில் டக் அவுட்டாகிய அவர் இந்த போட்டியில் அசத்துவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 1 ரன் எடுத்த நிலையில் அதிரடியாக ஆட ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து சாம்சன் களமிறங்கினார்.


ருதுராஜ் அரைசதம்:


களமிறங்கியது முதல் சாம்சன் அதிரடியாக ஆட ருதுராஜ் நிதானமாக ரன்களை சேர்த்தார். சாம்சன் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாச இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களை எடுத்தது. மறுமுனையில் அபாரமாக ஆடிய சாம்சன் பெஞ்சமின் ஒயிட் சுழலில் போல்டானார். அவர் 26 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 40 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.




இதையடுத்து, ரிங்குசிங் களமிறங்கினார். ருதுராஜ்- ரிங்குசிங் ஜோடி ஓரிரு ரன்களாக சேர்த்தது.  விக்கெட்டுகள் விழுந்ததால் நிதானமாக ஆடி வந்த ருதுராஜ் 40 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்திய அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவரில் இந்திய அணி அதிரடிக்கு மாறும் என்று எதிர்பார்த்த நிலையில், ருதுராஜ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ரிங்குசிங் – ஷிவம்துபே ஜோடி சேர்ந்தனர்.


கடைசியில் கலக்கிய ரிங்கு:


இருவரும் இணைந்து அடித்து ஆட முயற்சித்தனர். ஆனாலும், அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியதால் ரன்களை சேகரிக்க முடியவில்லை. 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்திருந்தனர். இதனால், கடைசி 2 ஓவரில் இந்தியா அதிரடிக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது.


துபே பந்துகளை விளாச தடுமாறிய நிலையில் ரிங்குசிங் ஆட்டத்தை கையில் எடுத்தார். மெக்கர்த்தி வீசிய 19வது ஓவரில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசினார். கடைசி ஓவரில் ஷிவம் துபே அதிரடிக்கு மாறினார். முதல் 2 பந்துகளை அவர் சிக்ஸர் விளாச, 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 4வது பந்தை ரிங்கு சிங் சிக்ஸருக்கு விளாசினார். ஆனால், சிக்ஸருக்கு அவர் அடுத்த பந்தை விளாச முயற்சிக்க அந்த பந்தை கிரெக் கேட்ச் பிடித்தார். கடைசியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது.


ரிங்குசிங் 21 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 38 ரன்கள் விளாசினார். ஷிவம் துபே 16 பந்துகளில் 2 சிக்ஸருடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


மேலும் படிக்க: IND Vs IRE Live: கடைசியில் கலக்கிய ரிங்கு...! அயர்லாந்துக்கு 186 ரன்கள் டார்கெட்..!


மேலும் படிக்க: NZ vs UAE T20: சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நியூசி. அணியை முதன் முறையாக தோற்கடித்த UAE… சமனான தொடரில் கடைசி டி20 போட்டி இன்று!