அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் மழை காரணமாக இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெற்றி பெற்றது.
இந்தியா பேட்டிங்:
இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி இன்று டப்ளின் நகரில் உள்ள வில்லேஜில் நடக்கிறது. இந்த போட்டியில் அயர்லாந்து கேப்டன் ஸ்டிர்லிங் டாஸ் வென்றார். இதையடுத்து, அவர் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே இந்திய அணி இந்த போட்டியிலும் களமிறங்குகிறது.
போட்டி நடைபெறும் டப்ளினில் இன்று வானிலை நன்றாக இருப்பதால் இன்றைய போட்டி மழையால் பாதிக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்:
கேப்டன் பும்ரா தலைமையிலான இந்திய அணியின் துணை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்குசிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
கேப்டன் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியில் பால்ப்ரைன், டக்கர், ஹாரி டெக்டர், கர்டீஸ் காம்பெர், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடெய்ர், மெக்கர்த்தி, கிரெக் யங், ஜோஸ்வா லிட்டில், பெஞ்சமின் ஒயிட் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
ரசிகர்கள் ஆர்வம்:
கடந்த போட்டியிலே இந்திய அணியின் பேட்டிங்கை பார்க்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு மழையால் அந்த வாய்ப்பு பறிபோனது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்வதால் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும், வலுவான ஸ்கோரை குவிக்கும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்திய அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த கேப்டன் பும்ரா முதல் ஓவரிலே 2 விக்கெட் வீழ்த்தி இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அர்ஷ்தீப்சிங் கடைசி கட்டத்தில் ரன்களை வாரி வழங்குவதே கவலையளிக்கும் விதத்தில் உள்ளது. அர்ஷ்தீப்சிங் உள்பட இந்திய பந்துவீச்சாளர்கள் அயர்லாந்து பேட்டிங்கிற்கு சவால் அளிக்கும் விதத்தில் பந்து வீச வேண்டியது அவசியம் ஆகும்.
கடந்த போட்டியில் அசத்திய காம்பெர், மெக்கர்த்தி இந்த போட்டியிலும் அசத்துவார்கள் என்று அந்த நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும், பால்ப்ரைன், ஸ்டிர்லிங் சிறப்பாக ஆடினால் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம் ஆகும்.
மேலும் படிக்க: World Cup 2023: உலகக் கோப்பையில் மீண்டும் மாற்றப்படுகிறதா போட்டி தேதிகள்..? பிசிசிஐயிடம் ஹைதராபாத் கோரிக்கை!
மேலும் படிக்க: NZ vs UAE T20: சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நியூசி. அணியை முதன் முறையாக தோற்கடித்த UAE… சமனான தொடரில் கடைசி டி20 போட்டி இன்று!