துபாயில் சனிக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியை வென்றதன் மூலம், ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக நியூசிலாந்து அணியை தோற்கடித்து சாதனை படைத்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி. 


நியூசி. அணியை முதன் முறையாக தோற்கடித்த UAE 


துபாயில் நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்த்து விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் போட்டியை நியூசிலாந்து அணி வென்ற நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது அந்த அணி. இதன் மூலம் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. நியூசிலாந்து அணியை ஒருநாள், டி20 என எந்த வடிவத்திலும் இதுவரை அவர்கள் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது (டெஸ்ட் அந்தஸ்து இல்லை). இந்த போட்டியில் அணியின் கேப்டன் முஹம்மது வசீம் 55 ரன்கள் எடுத்து சேசிங்கில் வெற்றிக்கு வித்திட்டார்.






நியூஸிலாந்து பேட்டிங் சொதப்பல் 


முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த UAE அணிக்கு இலக்காக நியூசிலாந்து அணி 143 ரன்களை நிர்ணயித்தது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 142 ரன்கள் மட்டுமே குவித்தது. மார்க் சாப்மேன் (63) மட்டுமே அவர்கள் அணியில் சிறப்பாக ஆடினார். தொடக்க ஆட்டக்காரர் சாட் போவ்ஸ் மற்றும் ஜிம்மி நீஷம் இருவரும் 21 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்டர்கள் யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.  UAE அணியின் ஆயன் அப்சல் கான் நியூசிலாந்தின் டாப் ஆர்டரைக் குழைத்தார். சான்ட்னர் மற்றும் டேன் கிளீவர் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி 3-20 என்ற கணக்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.


தொடர்புடைய செய்திகள்: IND vs IRE 2nd T20: தொடரை வெல்லுமா பும்ராவின் இளம்படை?.. அயர்லாந்து - இந்தியா இடையே இன்று 2வது டி-20 போட்டி


143 என்ற இலக்கை துரத்திய UAE 


தொடர்ந்து ஆடிய UAE அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆர்யன்ஷ் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அவருக்கு பிறகு வசீம் மற்றும் விருத்தியா அரவிந்த் UAE இன்னிங்ஸை நிலைநிறுத்தினர். விருத்தியா அரவிந்த் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருக்கு பின் ஆசிப் கான் அவருடன் இணைந்தார். வசீம் 29 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை விளாசி 55 ரன்னில் இருந்தபோது, இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் அவர் விக்கெட்டை வீழ்த்தினார்.






இன்று மூன்றாவது போட்டி


தொடர்ந்து ஆடிய ஆசிப் கான் ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் குவித்து வெற்றிக்கனியை பறித்தார். அவர் நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதியின் 16 வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசி வெற்றியை எளிதாக்கினர். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரின் கடைசி போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதே மைதானத்தில் நடைபெறுகிறது.