இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ரோகித் - ஜடேஜா சதம்:
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் இங்கிலாந்து அணி வீரர் மார்க் வுட் வீசிய பந்தில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை பறிகொடுத்தார். 10 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் உட்பட 10 ரன்கள் எடுத்தார். மறுபுறம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். அப்போது களம் இறங்கிய சுப்மன் கில் டக் அவுட் ஆக, பின்னர் வந்த ராஜத் படிதர் 5 ரன்களில் நடையைக்கட்டினார். இதனிடையே ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அதன்படி ,157 பந்துகளில் 101 ரன்களை எடுத்தார்.
அறிமுக போட்டியில் அரைசதம்:
அந்த வகையில் மொத்தம் 196 பந்துகள் களத்தில் நின்ற ரோகித் சர்மா 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட 131 ரன்களை குவித்தார். அதேபோல் ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக விளையாடினார். அவருடன் அறிமுக வீரராக களம் இறங்கிய சர்ஃப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த போட்டியின் மூலம் தன்னுடைய அறிமுக அரைசதத்தை பதிவு செய்தார் சர்ஃப்ராஸ் கான். அதிரடியாக விளையாடிய அவர் 66 பந்துகள் களத்தில் நின்று 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 62 ரன்களை குவித்தார். சதம் அடிப்பார் என்று அனைவரும் காத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் களத்தில் நிற்கின்றனர். ஜடேஜா 212 பந்துகளில் 110 ரன்கள் விளாசியிருக்கிறார். இவ்வாறாக இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 86 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் மார்க் வுட் 17 ஓவர்கள் வீசி 69 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
மேலும் படிக்க: Ravindra Jadeja: பொறுப்பான ஆட்டம்; பேட்டிங்கில் க்ளாசிக் ஷோ காட்டிய ஜடேஜா; சதம் விளாசி அசத்தல்
மேலும் படிக்க: Sarfaraz Khan: தட்டிக் கொடுத்த ரோஹித்; வீண் போகாத நம்பிக்கை; அறிமுகப் போட்டியில் அரைசதம் விளாசிய சர்ஃப்ராஸ் கான்