உலகெங்கும் கிரிக்கெட் போட்டிகளை வளர்ப்பதற்காக பல நாடுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நடப்பாண்டிற்கான கிழக்கு ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3வது போட்டியில் சீனா – ஜப்பான் அணிகள் மோதின.


மிரட்டிய ஜப்பான்:


டி20 போட்டியான இந்த போட்டியில் ஜப்பான் அணி முதலில் பேட் செய்தது. ஜப்பான் அணிக்காக லச்சன் லேக் – கேப்டன் கென்டல் ப்ளெமிங் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சீன பந்துவீச்சை இவர்கள் இருவரும் துவைத்தனர் என்றே சொல்ல வேண்டும். களமிறங்கியது முதலே பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய இவர்களால் அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் சதத்தை கடந்தது.


இவர்கள் இருவரும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் தொடர்ந்து விளாசிக் கொண்டிருந்தனர். அரைசதம் விளாசிய இவர்களது அதிரடியை தடுக்க, சீன கேப்டன் வெய் பந்துவீச்சில் மாற்றம் செய்தார். ஆனால், யார் பந்துவீசிவாலும் அடிப்பேன் என்ற பாணியில் இருவரும் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.


அதிக ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்:


அபாரமாக ஆடிய லச்சன் லேக்கும், கேப்டன் ப்ளெமிங்கும் சதம் விளாசினர். 20 ஓவர்கள் முடிவில் ஜப்பான் அணி எந்த விக்கெட்டையும் இழக்காமல் 258 ரன்கள் விளாசியது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும். இதற்கு முன்பு, அயர்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தானின் தொடக்க வீரர்கள் ஷாசாய் – உஸ்மான் கானி 2019ம் ஆண்டு 236 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை ஜப்பான் வீரர்கள் முறியடித்துள்ளனர்.


கடைசி வரை ஆட்டமிழக்காத லச்லன் லேக் 68 பந்துகளில்  பவுண்டரி 12 சிக்ஸருடன் 134 ரன்களும், ப்ளெமிங் 53 பந்துகளில் 3 பவுண்டரி 11 சிக்ஸருடன் 109 ரன்களும் எடுத்திருந்தனர். சீனாவிற்காக 8 பேர் பந்துவீசியிருந்தனர்.


சிதைந்து போன சீனா:


259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கிய சீனா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் வெய் மட்டும் தனி ஆளாக ரன்களை எடுத்தார். கடைசியில் சீனா 16.5 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் வெய் 23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். சீன அணிக்காக கேப்டன் வெய், ஜோவ் குய் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர்.


சர்வதேச டி20 வரலாற்றில் ஒரு விக்கெட்டிற்காக அதிக ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை படைத்த ஜப்பான் அணிக்கு ரசிகர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.