இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி அமர்க்களப்படுத்தியுள்ளார். தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 157 பந்துகளை எதிர்கொண்டு தனது சதத்தினை எட்டினார். தொடக்கத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு இழந்து தத்தளித்து வந்த நிலையில் ரோஹித் சர்மா பொறுப்புடனும் சிறப்பாகவும் விளையாடி சதம் விளாசினார். இவருடன் கைகோர்த்த ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசி ஒத்துழைப்பு கொடுத்தார். ரோஹித் சர்மா இந்த சதத்தினை இந்தியாவில் 370 நாட்களுக்குப் பின்னர் விளாசியுள்ளார். 


இந்தியாவுக்கு சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ராஜ் கோட்டில் உள்ள சௌராஸ்ட்ரா மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. 


இந்தபோட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியின் இன்னிங்ஸை ரோஹித் சர்மாவும் ஜெய்ஸ்வாலும் தொடங்கினர். ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை 10 ரன்னில் இழந்து வெளியேறியது இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அதன் பின்னர் வந்த சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேற இந்திய அணிக்கு மேலும் அதிர்ச்சியாக அமைந்தது. அதன் பின்னர் வந்த ரஜித் படிதாரும் 5 ரன்னில் தனது விக்கெட்டினை இழக்க, இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து. 


 அதன் பின்னர் ரோஹித் சர்மாவுடன் இணைந்த ரவீந்திர ஜடேஜா இந்திய அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டார். இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு தாக்குதலை மிக எளிதாக கையாண்டனர். பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்த அல்லது நெருக்கடியை ஏற்படுத்த இங்கிலாந்து அணி நினைக்கும்போதெல்லாம், ரோஹித் சர்மாவோ அல்லது ஜடேஜாவோ ஒரு பவுண்டரியை விளாசி அசத்திவந்தனர். 


அரைசதம் கடந்த ரோஹித் சர்மா சதத்தினை நோக்கி முன்னேறினார். மேலும், ஜடேஜா சிறப்பாக அரைசதம் விளாசினார். இருவரும் இணைந்து இந்திய அணியை மிகச் சிறப்பாக சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்தனர். சதம் விளாசி சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 196 பந்துகளில் 131 ரன்கள் விளாசிய நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை மார்க் வுட் கைப்பற்றினார். ரோஹித் சர்மா மொத்தம் 14 பவுண்டரியும் 3 சிக்ஸரும் விளாசியிருந்தார்.