2024ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய முதல் டெஸ்ட் தொடராக இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் அமைந்துள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஹைதரபாத் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக, கடந்த சில தினங்களாகவே இரு அணிகளும் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்.


இந்தியா - இங்கிலாந்து:


2012ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் டெஸ்ட் தொடரை இழந்தது இல்லை என்ற பெருமையுடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதேசமயம், சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. இந்தி அணிக்கு எதிராக களமிறங்கும் இங்கிலாந்து அணி நேற்றே அறிவிக்கப்பட்டது.


அந்த அணி பிரதான வேகப்பந்துவீச்சாளராக மார்க் வுட்டை மட்டும் கொண்டு களமிறங்குகிறது. அனுபவ பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுடன் ஸ்பின்னர்களையே பிரதானமாக கொண்டு இங்கிலாந்து களமிறங்குகிறது.


சுழல் ஆதிக்கம்:


இந்திய அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்படவில்லை என்றாலும், மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியும் சுழற்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் அளித்தே களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு டெஸ்ட் மட்டுமே டிரா ஆகியுள்ளது.


இந்திய அணிக்காக இந்த மைதானத்தில் அஸ்வின் அபாரமாக பந்துவீசியுள்ளார். இதனால், இன்றைய போட்டியில் இந்திய அணியின் சுழல் அஸ்திரமாக அஸ்வின், ஜடேஜா முக்கிய அம்சமாக திகழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுடன் குல்தீப் யாதவும் களமிறங்க வாய்ப்பு உள்ளது.


கோலிக்கு பதில் யார்?


தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தற்போது அவரது இடத்தில் களமிறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது இடத்தில் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ரோகித்சர்மாவுடன் சுப்மன்கில் ஆட்டத்தை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளராக முகமது சிராஜ் மற்றும் பும்ரா உள்ளனர். மிடில் ஆர்டர் மட்டுமே கவலையளிக்கும் விதமாக இருப்பதால் அதை சரி செய்ய வேண்டிய நிலை இந்திய அணிக்கு உள்ளது.


ஹைதரபாத் மைதானத்தில் முதல் இன்னிங்சில் பேட் செய்யும் அணியின் சராசரி ரன்கள் 400 ரன்கள் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய விரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை இன்னிங்ஸ் தோல்வி அடைய வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்கிலாந்து ஆடும் லெவன்: ஜாக் கிராவ்லி, பென் டக்கட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ், ரெஹன் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேக் லீச்


மேலும் படிக்க: Ind vs Eng Test Series: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இதுவரையிலான தனிநபர், அணியின் சாதனைகள், நேருக்கு நேர் முடிவுகள்


மேலும் படிக்க: IND vs ENG: டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றுவாரா ஆண்டர்சன்? காத்திருக்கும் அற்புத சாதனைகள்!