இந்தியாவில் ஐபிஎல் எப்படியோ அதேபோலத்தான் ஆஸ்திரேலியாவில் பி.பி.எல். பிக் பேஸ் லீக் எனப்படும் இந்த பிபிஎல் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் ஐபிஎல் ஒரே ஆண்டில் நடப்பதைப் போல் இல்லாமல், பி.பி.எல். ஒரு ஆண்டின் இறுதியில் தொடங்கி மறு ஆண்டின் முதல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.
11 ஆண்டுகளுக்கு பின் மகுடம்:
இதனடிப்படையில் இதுவரை 13 சீசன்கள் நடைபெற்றுள்ளது. மொத்தம் 8 அணிகள் களமிறங்கிய 13வது பிபிஎல் சீசனை பிர்ஸ்பேன் ஹீட் அணி வென்றுள்ளது. மூன்று முறை சாம்பியனான சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிர்ஸ்பேன் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 11 ஆண்டுகளுக்குப் பின்னர் கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2012-13ஆம் ஆண்டில் வென்றிருந்தது.
இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனால் பிர்ஸ்பேன் ஹீட் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. முதல் ஓவரிலேயே பிரிஸ்பேன் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 5வது பந்தில் தொடக்க வீரர் பெயர்சன் தனது விக்கெட்டினை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர், வந்த மக் ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பிரவுனுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இருவரும் பொறுப்பாக ஆடியதுடன் அதிரடியாக பவுண்டரிகளையும் விளாசினர். ஆனால் இருவரும் அணியின் ஸ்கோர் 90 ரன்களாக இருந்தபோது அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதில் ஜாஸ் பிரவுன் 38 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்திருந்தார்.
அதன் பின்னர் வந்த ரென்ஷாவ் மற்றும் மேக்ஸ் பிரயாண்ட் கூட்டணி சிறப்பாக விளையாடியது. இருவரின் ஆட்டமும் ருத்ரதாண்டவமாக இருந்ததால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் பிர்ஸ்பேன் ஹீட் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்ததால் இமாலய இலக்கை செட் செய்யமுடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்திருந்தது.
54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:
அதன் பின்னர் களமிறங்கிய மூன்று முறை கோப்பையை வென்ற பலமான சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதன் பின்னர் வந்த வீரர்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் பிர்ஸ்பேன் ஹீட் அணியின் பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் சிட்னி அணியின் டாப் ஆர்டர் வீரர்களின் விக்கெட்டுகளை அள்ளியதால் சிட்னி அணியால் வெற்றி இலக்கை எட்டமுடியவில்லை.
இறுதியில் சிட்னி சிக்ஸர் அணி 17.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பிர்ஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 11 ஆண்டுகளுப் பின்னர் பிர்ஸ்பேன் ஹீட் அணி பிபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய பிர்ஸ்பேன் ஹீட் அணியின் பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனுக்கு வழங்கப்பட்டது.