2024ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் முதல் மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் அமைந்துள்ளது. இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது.


இந்தியா - இங்கிலாந்து நாளை மோதல்:


இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் வரும் நாளை தொடங்க உள்ளது. இதற்காக இங்கிலாந்து அணியினரும், இந்திய அணியினரும் ஐதராபாத் மைதானத்தில் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது அந்த அணியின் அனுபவம் மிகுந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.


அந்த அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கடந்தாண்டு ஓய்வு பெற்றார். அவர் இல்லாததால் ஆண்டர்சன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 41 வயதான ஆண்டர்சன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என்று சில தகவல்கள் வெளியானாலும், அவரது அனுபவம் இங்கிலாந்து அணிக்கு கைகொடுக்கும் என்று அந்த அணி நம்புகின்றது.


புதிய சாதனை படைப்பாரா ஆண்டர்சன்?


ஆண்டர்சன் இதுவரை இந்தியாவில் மட்டும் 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில், 2012ம் ஆண்டு மட்டும் நடந்த டெஸ்ட் தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த தொடரில் முக்கிய பங்காற்றினார். தற்போது ஆண்டர்சன் இந்தியாவில் பங்கேற்கும் 7வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.


இந்தியாவில் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஆண்டர்சன் இதுவரை 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். புதிய பந்தில் சிறப்பாகவே வீசும் ஆண்டர்சன் புதிய சாதனை படைக்க வாய்ப்பு காத்திருக்கிறது. அதாவது, இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான்  கோர்ட்னி வால்ஷ் தன்வசம் வைத்துள்ளார். அவர் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வால்ஷின் சாதனையை முறியடிக்க ஆண்டர்சனுக்கு இன்னும் 10 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.


700 விக்கெட்டுகள்:


மொத்தத்தில் இந்திய மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை நாதன் லயன் 56 விக்கெட்டுகளுடன் தன்வசம் வைத்துள்ளார். ஆண்டர்சன் 183 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இதுவரை 690 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொத்தமாக ஒரு டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 32 முறை 5 விக்கெட்டுகளையும், 3 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆண்டர்சன் இந்திய அணிக்கு எதிராக 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 139 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 6 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.


இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் ஆண்டர்சன் 700 விக்கெட்டுகளை வீழ்த்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மேலும் படிக்க: IND vs ENG Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்... விராட் கோலி இல்லாததும் நல்லதுதான்- ராகுல் ட்ராவிட்!


மேலும் படிக்க: Ind vs Eng Test Series: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இதுவரையிலான தனிநபர், அணியின் சாதனைகள், நேருக்கு நேர் முடிவுகள்