இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இந்திய நட்சத்திர வீரர் விராட்கோலியின் சம்பவம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருபவர் விராட் கோலி. ஏராளமான சாதனைகளை படைத்துள்ள விராட்கோலி இந்திய அணிக்கு எப்படி நட்சத்திர வீரராக உள்ளாரோ? அதேபோல ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்.
ஆர்.சி.பி அல்ல இந்தியா:
பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி, டெல்லியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் சிலர் விராட்கோலியின் பெயரை கூறி ஆர்.சி.பி. என்று கரகோஷம் எழுப்பினர். அதைக்கேட்ட விராட்கோலி, ரசிகர்களை பார்த்து ஆர்.சி.பி. என்று கத்தக்கூடாது என கைகளால் சைகை காட்டினார். மேலும், இந்திய அணிக்காக தான் இப்போது ஆடுவதால் இந்தியா என்று மட்டும் கரகோஷம் எழுப்புங்கள் என்று உணர்த்தும் விதமாக தனது இந்தியன் அணி ஜெர்சியை காட்டினார்.
விராட்கோலியின் இந்த செயல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பேட்டிங் மட்டுமின்றி களத்திலும் விராட்கோலி மிகவும் ஆக்ரோஷமானவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. களத்தில் எதிரணி வீரர்கள் ஏதேனும் அவரை சீண்டினால் அதற்கு பதிலடி கொடுத்து தான் எப்போதும் கிங் என்பதையும் பலமுறை நிரூபித்துள்ளார். அதற்கான சான்றுகள் இணையத்தில் பல உள்ளன.
பெங்களூரின் ஆஸ்தான வீரர்:
மேலும், எந்தளவு ஆக்ரோஷமாக உள்ளாரோ அதே அளவு மிகவும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர் விராட்கோலி. மைதானத்தில் அவர் செய்த சேட்டைகள் பலவும் இணையத்தில் உள்ளது. ஐ.பி.எல். அணிகளில் பெங்களூர் அணிக்கு ஆதரவாக பல ரசிகர்கள் இருப்பதற்கு ஒரே காரணம் விராட்கோலி என்பதே உண்மை. கடந்த 2008ம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி வரும் விராட்கோலி 2014ம் ஆண்டு முதல் கடந்த 2021ம் ஆண்டு வரை அந்த அணியின் கேப்டனாகவும் இருந்தார்.
இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும் கோப்பையை மட்டும் பெங்களூர் அணி ஒரு முறை கூட கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: TNPL 2023: டிஎன்பிஎல்லில் முதல் முறையாக ஏலம்.. தக்கவைத்துகொண்ட வீரர்கள்.. 70 லட்சம் தொகை.. முழுவிவரம்!
மேலும் படிக்க: KL Rahul: கே.எல். ராகுலை மீண்டும் விளாசும் வெங்கடேஷ் பிரசாத்.. ”போயி கவுண்டி கிரிக்கெட் விளையாடுங்க”