இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.


திருப்பதியில் சுவாமி தரிசனம்:


ஆஸ்திரேலியா உடனான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், தனது மனைவி தேவிஷா ஷெட்டி மற்றும் தாய், தந்தை ஆகியோர் உடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, தீர்த்தபிரசாதம் வழங்கப்பட்டது. ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு, ரங்கநாயகுலா மண்டபத்தில் வேத பணிடிதர்களின் ஆசிர்வாதம் வழங்கினர். தொடர்ந்து, கோயில் வளாகத்திற்குள் வந்த அவரை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். வாகனத்தில் ஏறிய பிறகும் சில ரசிகர்கள், சூர்யகுமார் யாதவ் உடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்தனர்.






டெஸ்டில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ்:


அண்மையில் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானார். முதல் போட்டியில் அவர் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டு இரண்டாவது போட்டியில் சூர்யகுமாருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதனிடையே, 3வது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் சூர்யகுமாரின் பெயர் இடம்பெற்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு நீண்ட இடைவெளி உள்ளதால் இந்திய வீரர்கள், பயிற்சிக்கு முன்னதாக தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யகுமார் யாதவ் தனது மனைவியுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அண்மையில், கேரளாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது. இந்திய வீரர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.