அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்த போட்டியில் தற்போது வரை 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்களை எடுத்துள்ளது. அபாரமாக ஆடிய உஸ்மான் கவாஜா இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்பார்த்த நேரத்தில் அவர் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


இந்த நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவில் கேமரூன் கிரீன் – உஸ்மான் கவாஜா ஜோடி புதிய வரலாறு படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 170 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா – கேமரூன் ஜோடி 5வது விக்கெட்டுக்கு அபாரமாக ஆடியது. இருவரும் இணைந்து 208 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தனர்.




இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பார்ட்னர்ஷிப் குவித்துள்ள அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோரில் இது 2வது ஆகும். இதற்கு முன்பு 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பார்டர் – ஹியூக்ஸ் ஜோடி 3வது விக்கெட்டிற்கு 222 ரன்கள் குவித்ததே இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய ஜோடி குவித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.


தற்போது 44 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை வரை நெருங்கிய கேமரூன் – கவாஜா ஜோடி சொற்ப ரன்களில் அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது. இருப்பினும் இவர்களது அபாரமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலைக்கு முன்னேறியது. கவாஜா 180 ரன்களிலும், கேமரூன் கிரீன் 114 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.




அகமதாபாத் மைதானம் பேட்டிங்கிற்கு நல்ல சாதகமாக விளங்குவதால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நங்கூரமிட்டுவிட்டனர். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணியும் சிறப்பாக பேட் செய்தால் போட்டி டிராவில் முடிவடைய வாய்ப்பு உள்ளது. இந்திய அணியில் தற்போது வரை அஸ்வின் 45 ஓவர்கள் வீசி 14 ஓவர்களை மெய்டனாக்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முகமது ஷமி 2 விக்கெட்டையும், அக்‌ஷர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.


ஆஸ்திரேலிய அணியின் ட்ராவிஸ் ஹெட் 32 ரன்களிலும், லபுஷேனே 3 ரன்னிலும், கேப்டன் ஸ்மித் 38 ரன்களிலும், ஹேண்ட்ஸ்கோம்ப் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் கேரி டக் அவுட்டாகியும், ஸ்டார்க் 6 ரன்னிலும் அவுட்டாகினர். முன்னதாக, நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியை இந்திய பிரதமர் மோடி – ஆஸ்திரேலிய பிரதமர் தொடங்கி வைத்தனர். மேலும், நேற்றைய போட்டியை இரு நாட்டு பிரதமர்களும் நேரில் கண்டுகளித்தனர். இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு இந்திய அணி உலஙக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   


மேலும் படிக்க:Pat Cummins Loss : ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் வீட்டில் பெரிய இழப்பு.. கருப்பு பட்டை அணிந்து களம் கண்ட வீரர்கள்!


மேலும் படிக்க: Watch Video: வானுயர்ந்த பந்து.. மின்னல் வேகத்தில் பாய்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!