கேப்டன் பாட் கம்மின்ஸின் தாயார் மரணமடைந்ததை அடுத்து, இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது கைகளில் கருப்பு பட்டை அணிந்து இரங்கலை வெளிப்படுத்தினர். 


ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் இன்று காலை அகமதாபாத்தில் விளையாடுவதற்கு முன்பு, தங்களது அணி வீரர்களை அழைத்து,மார்பக புற்றுநோயால் மரியா கம்மின்ஸ் காலமானார் என்று தெரிவித்தார். இதையடுத்து, தற்போது ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். 






இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “ பாட் கம்மின்ஸ் தாயார் மரியா கம்மின்ஸ் இன்று அதிகாலை காலமானார். இந்த தகவலை அறிந்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் சார்பாக, பாட், கம்மின்ஸ் குடும்பத்தினர் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆஸ்திரேலிய ஆண்கள் அணி மரியாதையின் அடையாளமாக இன்று கருட்டையை அணியும்." என்று பதிவிட்டு இருந்தது. 






இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட் கம்மின்ஸின் தாயாரின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான காலகட்டத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் இருக்கும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. 






இரண்டாம் நாளை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட்டை விட்டுகொடுக்காமல் விளையாடி வருகிறது. தற்போது 4 விக்கெட்டுக்கு 292 ரன்களுடன் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. கவாஜா 128 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 63 ரன்களுடனும் விளையாடி வருகின்றன.