இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ், நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்டின் 2-வது நாளில், தனது சிறப்பான செயல் மூலம், ரசிகர் ஒருவரின் இதயத்தை வென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
ரசிகருக்கு எனர்ஜி ட்ரிங்க் கொடுத்த சிராஜ்
இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தின் போது, சிராஜ் தனது எனர்ஜி ட்ரிங்கை ரசிகர் ஒருவருக்கு கொடுத்தார். எல்லையில் பீல்டிங் செய்யும்போது தடுப்புக்கு பின் உள்ள அவரது ரசிகர் ஒருவருக்கு குடிப்பதற்கு அந்த எனர்ஜி ட்ரிங்கை பணியாளரிடம் இருந்து வாங்கி கொடுத்தார். இதனை கண்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆர்பரித்தனர்.
மோசமாக ஆடும் இந்திய அணி
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் விளையாடியதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இரண்டு மோசமான தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் எழுச்சி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த போராடிய இந்திய அணி அதில் இரு இன்னிங்சிலுமே தோல்வியுற்றது.
மகிழ்ந்த ரசிகர்
இந்த போட்டி இப்படி சென்றாலும், இளம் ரசிகரை சிறிது உற்சாகப்படுத்த, வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் தனது எனர்ஜி ட்ரிங்கை எடுத்து இளம் ரசிகரை நோக்கி வீசினார், அதனை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கேட்ச் பிடிக்க, கூட்டம் ஆரவாரம் ஆனது. கிரிக்கெட் வீரரிடமிருந்து தான் கண்ட சிறப்பு தருணத்தில் ரசிகர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதோடு வீடியோ கிளிப் முடிந்தது.
சிராஜின் பர்ஃபார்மன்ஸ்
முகமது சிராஜ் இளம் ரசிகரை தனது இனிமையான செயல் மூலம் ஸ்பெஷலாக உணர வைத்த இந்த சம்பவத்தின் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்திய அணி பீல்டிங் செய்யும்போது, சிராஜ் எல்லையில் நின்றார், அப்போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றது. சிராஜை மிக அருகில் இருந்து பார்த்த அந்த இளம் ரசிகர் திடீரென்று மிகவும் உற்சாகமடைந்து, அவரது பெயரைச் சொல்லி கோஷமிடத் தொடங்கினார். இந்த தொடரில் முகமது சிராஜ், இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். ஆடியது அனைத்துமே ஸ்பின் ட்ராக் என்பதால், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் ஆஸ்திரேலியாவின் இரண்டு இன்னிங்சிலும் விக்கெட் இல்லாமல் போனார். ஆனால் ஒரு நாள் தொடர்களில், ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், அவர் இந்தியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.