சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலியானது என்ற பரபரப்பு புகாரை அண்ணா பல்கலைக்கழகம் அளித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கும் சர்வதேச  ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில்  கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல பிரிவுகளின் கீழ் பல பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, யூடியூபர் கோபி மற்றும் சுதாகர் உள்ளிய பலருக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலியானது என்ற தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    



தொடர்பு கொண்டது எப்படி?


பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் சுதாகர் மற்றும் கோபி இருவருக்கும் "இன்ஸ்பிரேஷனல் யூத் ஐகான்" விருது வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது போலியானது என்பது குறித்து அவர்களின் கருத்தை கேட்டபோது "அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரை பயன்படுத்தி இப்படி மோசடி செய்யும் போது நாங்கள் உட்பட அனைவருமே கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. வெறும் பெயரை மட்டுமே வைத்து நம்பிவிடக்கூடாது. நாங்களே இதற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்து  அழைப்பு வந்தாலும் அதன் பேக் கிரௌண்ட் பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின்புதான் கலந்து கொள்ள வேண்டும்.


தனியார் அமைப்பில் இருந்து ஹரிஷ் என்பவர்தான் தொடர்பு கொண்டார். அவர் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு முன்னரே என்னை தொடர்பு கொண்டார். அதற்கு பிறகு அவரின் அழைப்பை நான் இக்னோர் செய்தேன். பின்னர் அவர்கள் வேறு வழியாக என்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்து கடைசியாக எனது மேனேஜர் மூலம் என்னை தொடர்பு கொண்டார்" என தெரிவித்துள்ளார்.


சட்டப்படி நடவடிக்கை :


ஓய்வு பெற்ற நீதிபதி, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பிரஸ் மீட் வைத்து அதன் மூலம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்கள். இந்த மோசடி குறித்து நீங்கள் எதுவும் காவல்துறையில் வழக்கு பதிவு செய்வது போன்ற சட்டப்படி எந்த நடவடிக்கைகளையும் முயற்சியும் எடுக்கவில்லையா என யூடியூபர் கோபியிடம் கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில் "ஏதாவது இனிமேல் தான் யோசிக்க வேண்டும். இதெல்லாம் எங்களுக்கு புதிதாக இருக்கிறது. நிச்சயமாக ஏதாவது செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார் கோபி.