இந்தூரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 9 வி்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்தது. இந்த தோல்வி இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தாலும், ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
இந்த சூழலில் இந்த அணிகள் விளையாடும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியுமே இறுதிப்போட்டிக்கான ரேசில் செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் என்று இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதையடுத்து, ஏதாவது ஒரு போட்டியில் டிரா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆஸ்திரேலியா ஆளானது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்வதை உறுதி செய்துள்ளது. இதனால், ஆஸ்திரேலிய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேசமயம் இறுதிப்போட்டியில் செல்வதற்கான பட்டியலில் உள்ள இந்திய அணி அகமதாபாத்தில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியை வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.
இந்தியாவா? இலங்கையா?
ஒருவேளை ஆஸ்திரேலிய அணி பார்டர் – கவாஸ்கர் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்து, இலங்கை அணி நியூசிலாந்து அணியை 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் போட்டியில் வென்றால் இந்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாது.
தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 68.52 சதவீதத்துடன் முதலிடத்திலும், இந்தியா 60.29 சதவீதத்துடன் 2வது இடத்திலும், இலங்கை அணி 53.33 சதவீதத்துடன் 3வது இடத்திலும் உள்ளன. இதனால், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் தற்போது இந்திய அணியும், இலங்கை அணியும் தங்களது அடுத்த டெஸ்ட் போட்டிகளில் களமிறங்க உள்ளன. நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகும் இலங்கை வரும் 9-ந் தேதி முதல் டெஸ்ட்டை கிறிஸ்ட்சர்ச்சிலும், 2வது டெஸ்ட் போட்டியை வெலிங்டனிலும் வரும் 17-ந் தேதியும் விளையாட உள்ளது.
இதனால், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியுடன் மோதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட இந்தியா, இலங்கை அணிகள் விறுவிறுப்பாக அடுத்த போட்டிகளில் ஆட உள்ளன. எந்த அணி முன்னேறினாலும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவது இதுவே முதன்முறை ஆகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் இங்கிலாந்து மைதானத்தில் மோதியது. ஆனால், அந்த போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை நியூசிலாந்திடம் தவறவிட்டது.
மேலும் படிக்க: WTC Final Qualification: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா என்ன செய்ய வேண்டும்?
மேலும் படிக்க: IND vs AUS 3rd Test: மூன்றே நாட்களில் இந்தியாவை சோதித்த சோகம்.. பழி வாங்கும் படலத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா..!