இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ளன. இந்தத் தொடரின் கடைசி டி20 போட்டி இன்று ஹைதரபாத்தில் நடைபெறுகிறது.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இந்தப் போட்டியில் அதிக விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


 


இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கேம்ரூன் க்ரீன் அதிரடி காட்டினார். இவர் முதல் ஓவர் முதல் சிக்சர் பவுண்டரி விளாச தொடங்கினார். அத்துடன் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் கேப்டன் ஃபின்ச் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். கேம்ரூன் க்ரீன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்காரணமாக 5 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது.


 


அதைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வேல் 6 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். இதனால் அதிரடியாக உயர்ந்து வந்த ஆஸ்திரேலிய அணியின் ரன் விகிதம் சற்று குறைந்தது. 10 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. 13வது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் 12 ரன்கள் விட்டு கொடுத்தார். அதையடுத்து ஆட்டத்தின் 14வது ஓவரை வீசிய அக்‌ஷர் பட்டேல் ஒரே ஓவரில் இங்லீஷ் மற்றும் மேத்யூ வேட் ஆகிய இருவரின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 


 






ஒரு கட்டத்தில் 200 ரன்களை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி 15 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழந்து 123 ரன்கள் சேர்த்து இருந்தது. ஆட்டத்தின் டெர்த் ஓவர்களில் இந்திய அணி சிறப்பாக பந்துவீசிய தவறியது. குறிப்பாக 18 மற்றும் 19 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 39 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய டிம் டேவிட் 25 பந்துகளில்  அரைசதம் விளாசினார். அவர் 54 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில்  ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. 187 ரன்கள் எடுத்தால் இந்திய அணி போட்டியை வெல்வது மட்டுமல்லாமல் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றிவிடும். இந்திய அணி தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.




மேலும் படிக்க: சர்ச்சையை கிளப்பிய மேக்ஸ்வேல் ரன் அவுட் செல்லுமா..?- ஐசிசியின் விதி கூறுவது என்ன?