இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ளன. இந்தத் தொடரின் கடைசி டி20 போட்டி இன்று ஹைதரபாத்தில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.


 


இந்நிலையில் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியிலும் முகமது ஷமி இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலிய தொடரிலிருந்து ஷமி விலகினார். அதன்பின்னர் இன்னும் அவர் தன்னுடைய உடற்தகுதியை நிரூபிக்கவில்லை. இது தொடர்பாக பிசிசிஐ தொடர்ந்து மருத்துவர்களிடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. 


 






இந்தச் சூழலில் தென்னாப்பிரிக்கா தொடருக்கான அணியில் முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதற்கு முன்பாக முகமது ஷமி முழு உடற்தகுதி பெறும் பட்சத்தில் அவரே தென்னாப்பிரிக்கா தொடரில் பங்கேற்பார் என்று கருதப்படுகிறது. 


இந்தியா- தென்னாப்பிரிக்கா தொடர்:


செப்டம்பர் 28- முதல் டி20 போட்டி


அக்டோபர் 2- இரண்டாவது டி20 போட்டி


அக்டோபர் 4- மூன்றாவது டி20 போட்டி


அக்டோபர் 6- முதல் ஒருநாள் போட்டி


அக்டோபர் 9- இரண்டாவது ஒருநாள் போட்டி


அக்டோபர் 11- மூன்றாவது ஒருநாள் போட்டி


தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க போன்ற வலுவான அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கு செல்வதற்கு முன்பாக அனுபவம் வாய்ந்த முகமது ஷமி கொரோனாவால் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த 10 மாதங்களாக இந்திய அணிக்காக டி20 தொடரில் பெரியளவில் ஆடாத முகமது ஷமி, உலககோப்பை இந்திய அணியில் இடம்பெற்றபோது பலரும் விமர்சித்தனர். ஆனால், கடந்த ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெறுவதற்கு முகமது ஷமியின் அபார பந்துவீச்சும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் முகமது ஷமி 16 போட்டிகளில் ஆடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


இந்திய அணிக்காக முகமது ஷமி கடந்தாண்டு நவம்பர் மாதம் கடைசியாக டி20 போட்டியில் ஆடினார். அதன்பின்னர், முகமது ஷமி இந்திய அணிக்காக எந்தவொரு டி20 போட்டியிலும் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, 33 வயதான முகமது ஷமி இந்திய அணிக்காக இதுவரை 17 டி20 போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 60 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 216 விக்கெட்டுகளையும், 82 ஒருநாள் போட்டிகளில் ஆடி 152 விக்கெட்டுகளையும், 93 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 99 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.




மேலும் படிக்க: தீப்தி ஷர்மாவையா கலாய்க்கிறீங்க..? இங்கி. வீரர்களை வச்சு செய்யும் சேவாக்..!