பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் தற்போது சிறந்த அணியை களத்தில் இறகுவதற்கான ஆலோசனையில் உள்ளன. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் அசுர பலத்துடன் உள்ளனர். முதல் ஐந்து பேர் நிலையாக இவர்கள் தான் என்று முடிவாகிவிட்டது. ஆனால் அடுத்த இடமான 6வது இடத்தில யாரை இறங்குவது என்று முடிவு செய்வதில்தான் நீண்ட நாளாக குழப்பம் ஏற்பட்டு வருகிறது. ஃபினிஷர் அவதாரம் எடுத்துள்ள தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்டின் இடத்தை பிடிக்கும் அளவுக்கு தொடர்ச்சியாக அவர் வேலையை கடைசி நான்கு ஓவர்களில் செய்து தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். அதுவே தேர்வர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையை கொண்டுவந்துள்ளது. ஹர்திக் பாண்டியா நிச்சயமாக இந்தியாவின் நம்பர் 5 ஆக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த நம்பர் 6 இடம் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.


நம்பர் 6 யாருக்கு?


ஜடேஜாவின் இடத்தில் அக்சர் படேல் சிறப்பாக செயல்படுவதால், அவரை ஏழாவது இடத்தில் வைப்பது பந்து வீச்சிற்கும் கூடுதல் பலத்தை சேர்க்கும். எனவே இந்த நம்பர் 6ல் இருவரில் யாரை இறங்குவது என்ற குழப்பத்தில், ​​மூத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் பல போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதால், நிர்வாகம் கார்த்திக் பக்கம் சற்று சாய்ந்துள்ளது என்ற உணர்வு உள்ளது. அதே நேரத்தில் பண்ட்டும் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் தவிர்க்கமுடியாத பங்களிப்பை செய்துள்ளார். இருவரையும் ஒப்பிடுகையில் தினேஷ் கார்த்திக்தான் முன்னிலை வகிக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா, ஆஸ்திரேலியாவில் ரெக்கார்ட்ஸை கருத்தில் கொண்டு, இந்திய அணியின் எக்ஸ்-ஃபேக்டர் என்று பண்ட்டை அழைக்கிறார். அவருக்கு சில ஆட்டங்கள் விளையாடக் கிடைக்கும் என்று நம்புகிறார்.



பண்டா? கார்த்திக்கா?


"அவர் ஒரு முக்கியமான வீரர். அவர் ஆஸ்திரேலிய மைதானங்களில் ஏற்கனவே இதனை செய்துள்ளார். சதம் அடித்து கப்பா டெஸ்டில் வெற்றி தேடித்தந்தார். இன்னொன்று பேட்டிங் ஆர்டரில் ஆறாவது இடம் வரை இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை. அதனால், ரிஷபை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது மிக முக்கியம். அவர் ஒரு சிறந்த வீரர், பிரஷரான சூழ்நிலைகளில் எப்படி பேட் செய்ய வேண்டுமெனத் தெரிந்தவர். அவரை எப்படி உள்ளே கொண்டு வருவது என்று நிர்வாகம் யோசிக்க வேண்டும். அதனால், ஓரிரு ஆட்டங்களில், நீங்கள் அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்க்க முடியும்," என்று ரெய்னா கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: watch video: ”பறக்க பறக்க துடிக்குதே..!“ தன்னை மறந்து நடனமாடிய Zomato ஊழியரின் வைரல் வீடியோ !


இடது கை ஆட்டக்காரர்


பண்டுக்கு ஆதரவாக உள்ள ஒரே புள்ளி அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதுதான். ஜடேஜா காயத்தால் அணியில் இடது கை பேட்ஸ்மேன்களாக இருப்பது அக்சர் பட்டேலும், ரிஷப் பண்டும்தான். அக்சர் பட்டேல் அவரால் பேட்டிங்கிலும் கை கொடுக்க முடியும் என்று காட்டியிருந்தாலும், ஒரு முழுமையான இடது கை பேட்ஸ்மேன் ரிஷப் மட்டும்தான். இதற்க்கு முந்தைய உலகக்கோப்பைகளை வெல்ல என்னையும், யுவராஜ் சிங்கையும், கவுதம் கம்பீரை போல எப்படி உதவியுள்ளனர் என்று விளக்கினார். 



எக்ஸ்-ஃபேக்டர்


"ஒரு இடது கை பேட்டரின் இருப்பு மிடில் ஆர்டரில் மிகவும் அவசியமானது என்று நான் கூறுவேன். பல அணிகளில் இரண்டு-மூன்று இடது கை வீரர்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நானும் யுவராஜ் சிங்கும் விளையாடும்போது எதிரணியினரை பயமுறுத்துவோம். இனி ராகுல், ரோஹித் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும். ஆனால் இருவரில் யார் விளையாடினாலும், இந்தியா வெற்றி பெற வேண்டும். ஆனால் எக்ஸ் ஃபேக்டரை ஹர்திக்குடன் கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் தினேஷ் கார்த்திக்கை விட்டு பண்டை தேர்வு செய்யவேண்டும் என்று நான் கூறவில்லை. யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், அதிக பொறுப்பை ஏற்று, விளையாட்டை வெல்ல வேண்டும். இடது-வலது கலவை எதிரணியை குழப்பும். குறிப்பாக ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியதாக இருக்கும் போது, நடுவில் ஒரு இடது கை பேட்ஸ்மேனை வைத்திருப்பது முக்கியம்", என்று ரெய்னா பிடிஐயிடம் தெரிவித்தார்.