T20 World Cup 2022: 2022ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பையில் விளையாட இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையில் ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் சௌஹான் பெர்த்தில் உள்ள WACA மைதானத்தில்  தீவிர பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல் பயிற்சியைத் துவங்கச் சென்ற இந்திய அணிக்கு முன்னதாக அந்த மைதானத்தில் ஞாயிற்றுக் கிழமை என்பதால் 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி வந்தனர். அதில், 11 வயதே நிரம்பிய ஒரு சிறுவனின் விளையாட்டு முறை இந்திய அணி வீரர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.  அவரது சீரான ரன்-அப், இயல்பான திறமை மற்றும் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்யும்  விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா அந்த சிறுவனை அழைத்து உரையாடினார். அதன் பின்னர் அந்த சிறுவனை தனக்கு பந்து வீசும்படி கூறினார். 11 வயதே ஆன த்ருஷில் ரோகித் ஷர்மாவிற்கு அவுட் ஸ்விங் யார்க்கர் பந்துகளை வீசியுள்ளார்.   மிகவும் சிறப்பாக பந்து வீசிய அந்த சிறுவனை ரோகித் ஷர்மா ட்ரெஸ்ஸிங் அறைக்கு அழைத்து மற்ற கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டார். மேலும், அந்த சிறுவனுக்கு ஒரு சில கிரிக்கெட் விளையாட்டுப் பொருட்களில் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார்.  இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த 11 வயதே ஆன த்ருஷில் ரோகித் ஷர்மாவிடம் ‘எனக்கு சிறந்த கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும்’ என கூறியுள்ளார். இவரை இந்திய அணி வீரர்கள் லிட்டில் பும்ரா என அழைத்துள்ளனர். 






 டீம் இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.  அக்டோபர் 23 அன்று  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான  போட்டியுடன் இந்த உலககோப்பை சீசனை தொடங்கவுள்ளது.  அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியைத்  தொடர்ந்து, இந்திய அணி அக்டோபர் 27 ஆம் தேதி, சிட்னியில் தகுதிச் சுற்று போட்டிகளில் தகுதி பெறும் அணிக்கு  எதிராக விளையாடவுள்ளது. அதைத் தொடந்து அக்டோபர் 30ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பெர்த்தில் மோதவுள்ளது.  நவம்பர் 2 ஆம் தேதி, வங்காளதேசத்திற்கு எதிராக அடிலெய்டிலிம் மற்றும் நவம்பர் 6 ஆம் தேதி தகுதிச் சுற்றில் தகுதி பெறும் மற்றொரு அணியுடன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில்  விளையாடுவார்கள்.


ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது ஷமி.