இங்கிலாந்து... நடப்பு உலகக் கோப்பை சாம்பியன். இந்த முறையும் அந்த அணிதான் உலகக் கோப்பையை கைப்பற்றும் என்ற பேச்சுகள் முன்னரே எழுந்தது.


அதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இங்கிலாந்து அணியே இந்த முறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்றும் கணித்தனர்.


ஆனால்... அந்த கணிப்புகள் நடந்ததா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்... ஏனென்றால் அந்த அணி விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்விகள். அதுவும் மோசமான தோல்விகளை சந்தித்தது. இந்நிலையில், அந்த அணி இந்த தொடரில் எப்படி விளையாடியது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


ஆரம்பமே தோல்வி:


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் ஒருநாள் தொடர்.


அதில் முதல் போட்டியிலேயே நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இறுதி போட்டியில் மோதிய இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும்தான் மோதின. 


இந்த போட்டியில், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 282 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 36.2 ஓவர்களின் படி 283 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  


சொதப்பல் பந்து வீச்சு:


இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன், மார்க் வூட், மொயின் அலி, அடில் ரஷித் ஆகியோரில்  சாம் கர்ரன் மட்டுமே ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மற்ற வீரர்கள்  நியூசிலாந்து அணியின்  விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறினார்கள்.


அதேபோல், தங்களுக்கான மூன்றாவது லீக் போட்டியை ஆப்கானிஸ்தான் அணியுடன் எதிர்கொண்ட இங்கிலாந்து, அந்த போட்டியிலும் மோசமான தோல்வியைத் தான் சந்தித்தது.


49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 40. 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 215 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


இலங்கை அணிக்கு எதிராக கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 33. 2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது இங்கிலாந்து. 


பேட்டிங்கிலும் சொதப்பிய இங்கிலாந்து:


ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர் போன்ற தரமான பேட்ஸ்மேன்களை வைத்து கொண்டு தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் சொதப்பியது இங்கிலாந்து அணி. இலங்கை அணியுடனான போட்டியிலும் இதே நிலைமைதான்.


எளிமையாக வெற்றி பெற வேண்டிய போட்டிகளிலும் தோல்வியைத் தான் சந்தித்துள்ளது இங்கிலாந்து.


மோசமான தோல்வி:


தென்னாப்பிரிக்க அணியிடம் பெற்ற தோல்வியை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். 399 என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறு, 170 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 


இந்த போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பலரும் படுமோசமாக விளையாடினார்கள்.  டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அந்த அணி ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தினார்கள்.


எளிய இலக்கையும் எட்டிப்பிடிக்க முடியாமல், இமாலய இலக்கையும் தொட முடியாத சூழலில் தான் நேற்றைய போட்டியிலும் தோல்விக் கணக்கை தங்கள் வசப்படுத்தியது இங்கிலாந்து. அதன்படி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.


என்ன தான் ஆச்சு?


இத்தனைக்கு இங்கிலாந்து அணி வீரர்கள் பலருக்கும் நன்றாக பாத்தியப்பட்ட மைதானங்கள் தான் இந்திய கிரிக்கெட் மைதானங்கள். அதோடு மட்டுமின்றி இங்கிலாந்து அணி வீரர்களில் முக்கால் வாசிப்பேர் ஐபிஎல் தொடர்களிலும் விளையாடியவர்கள் தான்.


சூழல் இப்படி இருக்க அந்த அணிக்கு என்ன தான் ஆச்சு? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். 


மேலும் படிக்க: Mohammed Shami: பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் ஆயுதம்! இந்திய அணியின் எல்லைச்சாமியான முகமது ஷமி!


மேலும் படிக்க: World Cup Points Table: மீண்டும் உச்சம் தொட்ட இந்திய அணி.. இங்கிலாந்து தொடர்ந்து 10வது இடம்.. புள்ளிப்பட்டியல் நிலை இதுதான்..!