SL vs AFG Match Highlights: இலங்கை அணியை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதிர்ச்சி தொடக்கம்:
இலங்கை அணி நிர்ணையித்த 242 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. தொடக்க ஆட்டக்காரரான குர்பாஸ் முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் கிளீன் போல்டானார். தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த, ஜாட்ரன் மற்றும் ரஹ்மத் ஷா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கிடுகிடுவென உயர்ந்த ரன்:
இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 10 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 50 ரன்களை சேர்த்தது. ஜாட்ரன் 39 ரன்கள் எடுத்து இருந்த போது மதுஷங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேநேரம் மறுமுனையில் ரஹ்மத் ஷா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். 74 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 62 ரன்கள் சேர்ந்து ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் திரும்பியபோது, ஆப்கானிஸ்தான் அணி 131 ரன்களை எட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஷாஹிதி - உமர்சாய் அபார கூட்டணி:
மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாஹிதி மற்றும் உமர்சாய், நிலைத்து நின்று ஆடி ரன் சேர்த்தனர். இந்த கூட்டணி சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசியது. இதனால் ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. ஷாஹிதி மற்றும் உமர்சாய் ஆகியோர் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். இந்த கூட்டணி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 111 ரன்களை சேர்த்தது.
அபார வெற்றி:
இதனால் 45.2 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷாஹிதி 58 ரன்களையும், உமர்சாய் 73 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை விழ்த்திய ஆப்கானிஸ்தான், இலங்கையையும் வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பையில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:
உலகக் கோப்பையின் 30வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கையின் தொடக்க ஆட்டக்காரரான கருணரத்னே வெறும் 15 ரன்களில் நடையை கட்டினார். அதேநேரம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிசாங்கா 46 ரன்கள் சேர்த்து நடையை கட்டினார்.
இதையடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி, சமரவிக்ரமா 36 ரன்கள், டி சில்வா 14 ரன்கள், அசலன்கா 22 ரன்கள் மற்றும் சமீரா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஓரளவு தாக்குபிடித்த மெண்டிஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இறுதியில் 49.3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபரூக்கி 4 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், ஒமர்சாய் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.