இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகியது.
அதன்படி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 6 இடங்கள் முன்னேற்றியுள்ளார். இதுவரை 10ஆவது இடத்தில் இருந்த பும்ரா 4-ஆவது இடத்திற்கு முன்னேறி டாப்- 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். அதேபோல் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மோசமான ஃபார்ம் காரணமாக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பாக 5ஆவது இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது 4 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு 9ஆவது இடத்தில் உள்ளார். அதேபோல் மற்றொரு இந்திய வீரரான ரிஷப் பண்ட் தொடர்ந்து 10ஆவது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 6ஆவது இடத்திலும் உள்ளனர். அதேபோல் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் ஜேசன் ஹோல்டர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அத்துடன் தொடர்ச்சியாக இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் 14 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அத்துடன் கேப்டனாக பதவியேற்ற முதல் போட்டியிலேயே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற சாதனையை முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றியின் போது ரோகித் சர்மா படைத்திருந்தார். 1952ஆம் ஆண்டு பாலி உம்ரிகருக்கு பிறகு ரோகித் சர்மா மட்டும் தான் கேப்டனாக செயல்பட்ட முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ரிஷப்பண்ட் 40 நிமிடங்களில் ஆட்டத்தையே மாற்றும் வல்லமை கொண்டவர் - ரோகித்சர்மா புகழாரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்