ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்படும் அதிவேக சதங்களுக்கும், டெஸ்ட் போட்டிகளில் அடிக்கப்படும் அதிவேக சதங்களுக்கும் நிறைய வேறுபாடுகளும், நிறைய கடினங்களும் உள்ளது. மிகவும் நிதானமான ஆட்டப்போக்கையும், கடினமான பந்துகளுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிலவும்.
1982ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை 220 பந்துகளில் இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் படைத்தார். அவரது சாதனையை 20 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 212 பந்துகளில் இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் முறியடித்தார். அவரது சாதனைக்கான பாராட்டு மழை ஓய்வதற்குள்ளே கில்கிறிஸ்டின் சாதனையை நியூசிலாந்து வீரர் நாதன் ஆஸ்லே முறியடித்தார்.
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரத்தில் 2002ம் ஆண்டு மார்ச் 16-ந் தேதி (அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்) இதே நாளில் நியூசிலாந்து அணி இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 550 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தபோது 119 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது, நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய நாதன் ஆஸ்லே களமிறங்கியது முதல் அதிரடியில் ஈடுபட்டார்.
தனது அதிரடியால் விரைவாகவே சதத்தை கண்டார் ஆஸ்லே, சதம் கண்ட பிறகும் அவரது ஆவேசம் அடங்கவில்லை. பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டிய நாதன் ஆஸ்லே 153 பந்துகளில் இரட்டை சதத்தை நொறுக்கினார். கில்கிறிஸ்ட் எடுத்த அதிவேக இரட்டை சதத்தை காட்டிலும் 60 பந்துகள் குறைவான பந்துகளிலே அவர் இரட்டை சதம் எட்டியிருந்தார்.
கடைசியாக 168 பந்துகளில் 222 ரன்களுக்கு ஆஸ்லே ஆட்டமிழந்தார். அவர் அந்த போட்டியில் 28 பவுண்டரிகளும், 11 சிக்ஸர்களும் விளாசியிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கப்பட்ட 214வது இரட்டை சதம் ஆகும். அந்த போட்டியில் நியூசிலாந்து தோற்றாலும் நாதன் ஆஸ்லேவின் அதிவேக இரட்டை சதத்திற்கு பிறகு, இந்த 20 ஆண்டுகளில் 179 முறை இரட்டை சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளாசப்பட்டுள்ளது. ஆனால், ஒருவர் கூட நாதன் ஆஸ்லேவின் சாதனையை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்