டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் 2வில் நடைபெறும் இன்றைய சூப்பர் 12 போட்டியில் ஆஃப்கானிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் 3ஆவது ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஷேசாத் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹசரத் ஷாசையும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 


இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 5 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்து திணறியது. அப்போது 6ஆவது ஓவரின் முதல் பந்தில் ரமனுல்லா குர்பாஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன்காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணி பவர்பிளேவின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்தது. 




குலாப்தின் நையிப் மற்றும் நஜிபுல்லா ஷர்தான் ஒரளவு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் ஆட்டத்தின் 10ஆவது ஓவரில் சோடியின் பந்துவீச்சில் நையிப் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது நபி மற்று நஜிபுல்லா ஷர்தான் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 


 






சிறப்பாக விளையாடிய நஜிபுல்லா ஷர்தான் 33 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மேலும் அவரும் கேப்டன் முகமது நபியும் 5ஆவது விக்கெட்டிற்கு 59 ரன்கள் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து கேப்டன் முகமது நபி 14 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் 18 ஓவர்களின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. 19ஆவது ஓவரில் சிறப்பாக ஆடி வந்த நஜிபுல்லா ஷர்தான் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களின் உதவியுடன் 48 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்பு வந்த கரீம் ஜனத் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. 


சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நியூசிலந்து, ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தற்போது அனைத்து அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதன்படி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதற்கு அடுத்து 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி 2 ஆவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் தலா 2போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளனர். 


எனவே இன்று நடைபெறும் போட்டியில் சூப்பர் 12 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணிக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இந்தப் போட்டி இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி - தென்னிந்தியாவில் இருந்து பயிற்சிக்கு தேர்வான கோவில்பட்டி மாணவர்