உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதால் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்தியா நிர்ணயித்த 152 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விக்கெட் எதையும் இழக்காமலேயே எட்டியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஷ்வான் சிறப்பாக விளையாடினார்கள். உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை முதன்முறையாக வெற்றி பெற்று வரலாற்றை மாற்றி அமைத்தது பாகிஸ்தான்
இஷா மியா என்பவர் தனது மனைவி ரபியா சம்ஷி என்பவர் மீது புகார் அளித்துள்ளார். அதில் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதையடுத்து ரபியாவின் குடும்பம் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாகக் கூறப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இருவரும் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. ரபியா தன் பெற்றோரின் வீட்டில் உள்ளார். அவர் ஏற்கெனவே தனது கணவர் மியா மீது வரதட்சணை கேட்டதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதற்காக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவான பதிவுகளை இட்டதால் சமீபத்தில், மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேந்த ந23 வயது இளைஞரை அம்மாநில காவல்துறை தேச துரோக வழக்கின் கீழ் கைது செய்தது.
முன்னதாக பாகிஸ்தானின் வெற்றியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பாய் குர்தாஸ் பொறியியல் .கல்லூரியில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் உத்தரபிரதேச மாணவர்களால் தாக்கப்பட்டனர். அவர்களின் விடுதி அறைகளும் சூறையாடப்பட்டன.
அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்ததற்காக ராஜஸ்தானை சேர்ந்த ஒரு ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. உதய்ப்பூரில் உள்ள நீரஜா மோடி சர்வதேசப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் நஃபீசா அட்டாரி. இவர் பாகிஸ்தான் அணி கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதை அடுத்து அதை தனது வாட்சப் ஸ்டேட்டஸில் பகிர்ந்து நாம் வெற்றிபெற்றுவிட்டோம் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த பெற்றோர் ஒருவர் ’நீங்கள் பாகிஸ்தானை ஆதரிக்கிறீர்களா?’ என அவரிடம் கேட்டுள்ளார்.அதற்கு அவர் ஆம் என பதிலளித்துள்ளார். இதையடுத்து இதை ஒரு புகாராக பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துச் சென்றுள்ளார் அந்த பெற்றோர். பள்ளி நிர்வாகம் இதனையடுத்து அந்த ஆசிரியரை பணியிலிருந்து நீக்கியுள்ளது. அதுகுறித்த அறிவிப்பில், ‘’நீரஜா மோடி பள்ளி நிர்வாகத்தினர் கூடி எடுத்த முடிவின்படி ஆசிரியர் தனது பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது போலீஸிலும் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் மனைவி மீது கணவர் புகாரளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.