உலககோப்பை டி20 ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் 1 பிரிவில் அரையிறுதிக்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தகுதி பெற்றுள்ளது. குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. கடைசி அணியாக அரையிறுதிக்கு முன்னேறுவதில் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.


இந்த நிலையில், அரையிறுதிக்கு செல்லப்போகும் நான்காவது அணி யார் என்பதை தீர்மானிப்பதற்கான முக்கியமான ஆட்டம் இன்று நடக்கிறது. அபுதாபி மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் முடிவே உலககோப்பையின் விறுவிறுப்பை மேலும் அதிகரிக்கப் போகிறது.




துபாய் மைதானத்தை காட்டிலும் அபுதாபி மைதானம் நன்றாகவே பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கக் கூடியது. முதலில் பேட் செய்யும் அணிக்கும் சரி, சேசிங் செய்யும் அணிக்கும் சரி இந்த ஆடுகளம் நன்றாக ஒத்துழைக்கும். நடைபெற்று முடிந்த டி20 ஆட்டங்களை ஒப்பிடும்போது நியூசிலாந்து அணிக்கு சமமான பலத்துடன்தான் ஆப்கானிஸ்தான் அணியும் உள்ளது.


ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ஷாசாத்தும், ஹஜ்ரதுல்லா ஷாசாயும் நிலைத்துவிட்டால் அந்த அணியின் ஸ்கோர் ஜெட்வேகத்தில் உயரும். குறிப்பாக, பவர்ப்ளே ஓவர்களில் ஷாசாய் அதிக ரன்களை குவிக்கும் வல்லமை பெற்றவர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஜட்ரான், குர்பாஸ் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கின்றனர். கடைசி கட்டத்தில் அதிரடியை வெளிக்காட்டும் வீரராக கேப்டன் முகமது நபி உள்ளார். அவருக்கு ஒத்துழைப்பாக ரஷீத்கானும் பேட்டிங்கில் பங்களிக்கும் வல்லமை பெற்றவர்.




பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அந்த அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் ஆப்கானிஸ்தானுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளார்.  அவருக்கு குல்பதீன் நைப், ஹமீது ஹாசன் வேகத்தில் ஒத்துழைக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி ரஷீத்கான் சுழலில் மிரட்டுவார் என்று கட்டாயம் எதிர்பார்க்கலாம். ரஷீத்கானுக்கு துணையாக முஜிப்-உர்-ரஹ்மானும் சுழலில் எதிரணி வீரர்களை வீழ்த்தும் வல்லமை கொண்டவர். ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தி தனது ரன்ரேட்டை உயர்த்திக்கொள்ள போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடலாம் என்பதால், நியூசிலாந்து அணியினர் கூடுதல் கவனத்துடனே ஆடுவார்கள். அந்த அணியினர் இதுவரை தாங்கள் ஆடிய போட்டிகளில் பாகிஸ்தான் அணியுடன் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளனர். நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் டேரில் மிட்செல் இருவரும் ஆபத்தான பேட்ஸ்மேன்கள். கேப்டன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய தூணாக விளங்குகிறார். இவர்கள் தவிர, கான்வே, கிளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம் என்று மிகப்பெரிய பேட்டிங் பட்டாளம் நியூசிலாந்திற்கு உண்டு.





நியூசிலாந்தின் பந்துவீச்சிற்கு ட்ரெண்ட் போல்ட், டிம் சவுதி, ஆடம் மிலன் வேகத்தில் உறுதுணையாக உள்ளனர். சுழலில் மிட்செல் சான்ட்னர் ஆபத்தானவராக விளங்குகிறார். நியூசிலாந்து  அணி ஆப்கானிஸ்தான் அணியை காட்டிலும் பலத்திலும், தரவரிசையிலும் பலமான அணியாக இருந்தாலும், ஆப்கானிஸ்தான் பயிற்சி போட்டியில் பலம்மிகுந்த மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய அணி என்பதாலும், அவர்களுக்கு பேட்டிங் கிளிக் ஆகிவிட்டால் சாதாரணமாக 180 ரன்களுக்கு மேல் குவிக்கும் வல்லமை பெற்றவர்கள் என்பதால் நியூசிலாந்திற்கு கடும் நெருக்கடி அளிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 4 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியும் 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. நமீபியா, ஸ்காட்லாந்து அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிட்டது.




நியூசிலாந்து அணி 1.277 ரன் ரேட்டுடனும், ஆப்கானிஸ்தான் 1.481 ரன்ரேட்டுடனும், இந்தியா 1.619 ரன்ரேட்டுடனும் உள்ளனர். குரூப் 2 பிரிவில் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியா அதிக ரன்ரேட்டுடன் உள்ளதால், இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று, அடுத்த போட்டியில் இந்தியா நமீபியாவை மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை பெறும். இதனால், இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.