உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான பயிற்சிக்கு கோவில்பட்டியை சேர்ந்த அரசு கல்லூரி மாணவர் மாரீஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தற்போதும் கிரிக்கெட்டை விட ஹாக்கி விளையாட்டே பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஹாக்கி விளையாடுவதற்காகவும் பயிற்சி மேற்கொள்வதற்காகவும் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் கூட களிமண் தரை கொண்ட ஹாக்கி மைதானங்கள் உள்ளன. தொடந்து ஹாக்கி விளையாட்டை இப்பகுதியில் ஊக்குவிக்கும் வகையில் 4 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு 7.50 கோடி மதீப்பிட்டில் சர்வதேச அளவிலான செயற்கை புல்வெளி மைதானம் மற்றும் மாணவர் விடுதியையும் அமைத்துள்ளது. 

                                  

 

கோவில்பட்டி ராமலிங்கம் தெருவை சேர்ந்த சக்திவேல் தீப்பெட்டிக்கான அட்டைப்பெட்டி தயாரிக்கும் குடிசை தொழில் செய்து வருகிறார். இவரது மகன் மாரீஸ்வரன் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு முதுகலை வணிகவியல் படித்து வருகிறார். இவர் தற்போது உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணிக்கு அளிக்கும் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு ஹாக்கி வீரர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட மாரீஸ்வரனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு வரவழைத்து  வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கி ஒடிசா புவனேஸ்வரில் நடைபெறவுள்ள பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைத்தார். 


                               

 

கோவில்பட்டி என்றாலே ஹாக்கி  என்ற நிலையில் ஹாக்கிக்கு ரசிகராகனார் சக்திவேல், தனது மகன் மாரீஸ்வரனை கோவில்பட்டி நேசனல் பொறியியல் கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் அகில இந்திய ஹாக்கி போட்டி, உள்ளூர் போட்டி என அனைத்துக்கும் அழைத்து சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட ஈர்ப்பில் தனது 10 ஆவது வயதில் ஹாக்கி மட்டையை பிடித்த சக்திவேல், 8 ஆம் வகுப்பு படிக்கும் போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய விளையாட்டு விடுதி வீரர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று, அரியலூரில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி ஹாக்கி பயிற்சியுடன் அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்து முடித்தவர். 


                               

 

இவர் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வில் பங்கேற்று 36 பேரில் ஒருவராக தேர்வு பெற்றார். தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய விளையாட்டு விடுதியில் தங்கியிருந்து ஹாக்கி பயிற்சி பெற்று வந்தார். இங்கு கடந்த மாதம் நடந்த மற்றொரு தேர்வில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாரீஸ்வரனும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.  இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் குரு சித்திர சண்முகபாரதி கூறும்போது, மாரீஸ்வரன் தற்போது இறுதி கட்ட பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதிலிருந்து 20 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் தான் டிசம்பர் மாதம் ஓடிசா மாநில புவனேஸ்வரில் நடக்க உள்ள உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவார்கள். தற்போது தேர்வு செய்யப்பட்ட 24 பேரில் மாரீஸ்வரனை தவிர கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளட்ட தென் இந்திய மாநிலங்களை சேர்ந்த யாருமே இல்லை. இதுவுவே தமிழகத்துக்கு மிகப்பெரிய பெருமை எனக்கூறும் அவர் கோவில்பட்டிக்கும் பெருமை சேர்த்து உள்ளார். ஏனென்றால், கோவில்பட்டி என்றாலே அது ஹாக்கி விளையாட்டு தான். அதனால் இதனை ஹாக்கிபட்டி என்று அழைப்போரும் உண்டு. எனவே, மாரீஸ்வரன் கண்டிப்பாக இந்திய அணிக்காக விளையாடி சாதனை படைப்பார் என்கிறார்.