டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதின.


இலங்கை அணி பேட்டிங்:


டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில், பதும் நிசன்க்கா சிறப்பாக ஆடி 45 பந்துகளில் 5 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 67 ரன்கள் சேர்த்தார். மேலும், ராஜபக்ச 22 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.




இவரையடுத்து, மற்ற வீரர்கள் சில ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது இலங்கை அணி. இங்கிலாந்து அணியைச் சேர்ந்த மார்க் வுட், சிறப்பாக பந்து வீசி அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் எடுத்தார்.


பரபரப்பான ஆட்டம்:


142 ரன்களை இலக்காக வைத்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில், ஹேல்ஸ் அதிரடியாக ஆடி 30 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஹசரங்கா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரையடுத்து,பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆட்டமிழக்காமல் ஆடி, 36 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து, வெற்றிக்கு கொண்டு சென்றார்.


15 ஓவர்களில் பந்துக்கும், ரன்களுக்கும் சீராக சென்று கொண்டிருந்த இங்கிலாந்து அணி, கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்தது.


பின்னர் 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. அதையடுத்து, 3 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது.




இங்கிலாந்து அணி வெற்றி:


மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் 4 வது பந்தை குமாரா வீச, அதை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ், பவுண்டரி அடித்து இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.


இதையடுத்து 19.4 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்குள் நுழைந்தது.






இதையடுத்து, அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி இழந்தது. ஏற்கனவே அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


வெளியேறிய ஆஸ்திரேலியா:


இங்கிலாந்து வெற்றி பெற்றால், இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை பெறும் என்றும், இலங்கை அணி வெற்றி பெற்றால், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழையும் என்றும் நிலை இருந்தது.


இதனால், இன்று நடைபெற்ற போட்டியானது இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெற்றாலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என்ற நிலை இருந்தது.


இந்நிலையில், இங்கிலாந்து வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலியா அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை இழந்தது.