உலகக்கோப்பை டி20 போட்டிகளில் சூப்பர் 12 குரூப் ஏ பிரிவில் இருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளன.


நியூசிலாந்து அணி சூப்பர் 12 சுற்றில் இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று 2.113 நெட் ரன் ரேட் உடன் முதலிடம் வகிக்கிறது.


அடுத்ததாக இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று, 0.473 நெட் ரன் ரேட் உடன் இரண்டாவது இடம் வகிக்கிறது.


7 புள்ளிகள் எடுத்து நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இந்த இரு அணிகளையும் சமன் செய்திருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் (0.173) உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.


 






தற்போது சூப்பர் 12 குரூப் பி பிரிவில் உள்ள இந்திய அணி 4 போட்டிகளில் 3 வெற்றி, 1 தோல்வி உடன் 6 புள்ளிகள் பெற்று 0.730 நெட் ரன் ரேட் உடன் முதலிடம் வகிக்கிறது.


தென் ஆப்பிரிக்க, பாகிஸ்தான் அணிகள் முறையே 5 மற்றும் 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


இந்நிலையில் நாளை எஞ்சியுள்ள போட்டிகளைப் பொறுத்து எந்த இரு அணிகள் அரை இறுதிக்குள் நுழையும் என்பது  தீர்மானிக்கப்படும்.


முன்னதாக டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதின.


டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில், பதும் நிசன்க்கா சிறப்பாக ஆடி 45 பந்துகளில் 5 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் அடித்து 67 ரன்கள் சேர்த்தார். இவரை அடுத்து மற்ற வீரர்கள் சில ரன்களிலே ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது இலங்கை அணி.


142 ரன்களை இலக்காக வைத்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இதன் மூலம் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இங்கிலாந்து அணி பெற்றது. இதையடுத்து, அரையிறுக்கு செல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி இழந்தது. ஏற்கனவே அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.