50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு என்று மிகுந்த எதிர்பார்ப்பு எப்போதும் உண்டு. இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெறும்.


நேரடி தகுதி:


இந்த பட்டியலில், முதல் 7 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்ட நிலையில், 8வது இடத்தை பிடிப்பதற்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. அதாவது, 8வது இடத்திற்கான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் போட்டியிடுகின்றன. இவர்களுடன் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளும் உள்ளன.






இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று மழையால் ரத்தான நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 7வது இடத்தை பிடித்து உலகக்கோப்பைக்கான நேரடி தகுதியை உறுதி செய்தது.


8வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 88 புள்ளிகளுடன் தற்போது உள்ளது. அயர்லாந்து அணி 68 புள்ளிகளுடனும், இலங்கை அணி 67 புள்ளிகளுடனும், தென்னாப்பிரிக்க அணி 59 புள்ளிகளுடனும் உள்ளன. இந்த புள்ளிகள் பட்டியலில் இலங்கை அணி 8வது இடத்தை பிடிக்க வேண்டுமானால் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.




முன்னாள் சாம்பியன்கள்:


அதேசமயம், 8வது இடத்தை பிடிக்க தென்னாப்பிரிக்க அணியும் கடும் போட்டியிட்டு வருகிறது. முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் நேரடி தகுதி பெறும் போட்டியில் உள்ளது. தற்போதுள்ள புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில், இந்தியா (134 புள்ளிகள்). இங்கிலாந்து(125 புள்ளிகள்), நியூசிலாந்து (125 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (120 புள்ளிகள்), வங்காளதேசம்(120 புள்ளிகள்), பாகிஸ்தான் (120 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் (115 புள்ளிகள்) பெற்று உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.


பாகிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் பங்கேற்க தவறினால், வேறு அணிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், முதல் இரு உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணியும், 1996ம் ஆண்டு உலகக்கோப்பையை இலங்கை அணியும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : Ruturaj Gaikwad: ஒரே ஓவரில் பறந்த 7 சிக்ஸர்கள்.. பந்துடன் சாதனையை தெறிக்கவிட்ட ருத்ராஜ் கெய்க்வாட்!


மேலும் படிக்க: M.S.Dhoni Dance in party: ஹர்திக்குடன் பார்ட்டி.. எம்.எஸ்.தோனியின் கலக்கல் நடனம்.. செம்ம குஷியான ரசிகர்கள்.. வைரல் வீடியோ..