Sanju Samson: இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடக்கும் கத்தார் நாட்டிலும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய கிரிக்கெட் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. கடைசி ஆட்டம் டிஎல்எஸ் முறைப்படி டிரா ஆனது.
இந்நிலையில், முதல் ஒரு நாள் ஆட்டம் இரு அணிகளுக்கு இடையே கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. இதில், இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடினார். முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளைாயடிய நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். 4 பவுண்டரிகளையும் அவர் விளாசி இருந்தார்.
தொடர்ந்து ட்ரெண்டிங்கில் சஞ்சு
நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படவில்லை. ஏற்கனவே கடந்த சில நாட்களாக சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் நிலையான இடம் அளிக்கப்படவேண்டும் என அவரது ரசிகர்களும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் கூட சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சஞ்சு சாம்சன் மீண்டும் இணையத்தில் வைரலாகி வந்தார்.
ஆனால் தற்போது 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடக்கக் கூடிய கத்தார் நாட்டிலும், அவருக்கு ஆதரவு பெருகியுள்ளது. அதுவும் கால் பந்து போட்டி நடக்கும் மைதானத்திற்குள் ரசிகர்கள் சஞ்சு சாம்சனின் புகைப்படம் இருக்கக் கூடிய பேனரையிம், கொடியையும் பிடித்துக் கொண்டு அவருக்கு ஆதரவு அளித்து வந்தனர்.
இதனை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டும் ஹேஸ்டேக் சஞ்சு சாம்சன் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். இதனால் கடந்த வாரத்தின் இறுதி முதல் இந்த வாரத்தின் தொடக்கத்திலும் சஞ்சு சாம்சன் இணையத்தில் தொடர்ந்து ட்ரெண்டாக உள்ளார். ரசிகர்கள் இவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.