கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, துபாயில் ஒரு நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்து கலக்கலாக நடனம் ஆடினார்.


அடுத்த ஆண்டு ஐபிஎல் திருவிழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தவுள்ள "தல" தோனி, துபாயில் நிகழ்ச்சியொன்றில் கலக்கல் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது திரைப்படத் துறையில் தடம் பதிக்க வரும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனத்தை தோனி தொடங்கியுள்ளார்.


குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அவர் மீதி நேரத்தை செலவழித்து வருகிறார். சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கேதார் ஜாதவ் ஆகியோரை காரில் ஒரு ரைடு அழைத்துச் சென்றார்.


இந்நிலையில், துபாயில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாடகர் பாட்ஷாவின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தோனிக்கும், ஹர்திக் பாண்ட்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் தோனியின் மனைவி சாக்ஷியும் பங்கேற்றார். தோனியும், ஹர்திக் பாண்ட்யாவும் உற்சாகமாக நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


முன்னதாக, இந்த மாதம் ஜேஎஸ்சிஏ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சாம்பியன் பட்டம் வென்றார். இவர் ஜார்க்கண்ட் டென்னிஸ் வீரர் சுமீத் குமார் பஜாஜ் உடன் இணைந்து விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றார்.


இதற்கு முன்பு ஏற்கனவே இரண்டு முறையும் அவர் சாம்பியன் பட்டத்தை இதே டென்னிஸ் போட்டியில் வென்றுள்ளார். இது அவரது மூன்றாவது சாம்பியன் பட்டம் ஆகும். ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள சர்வதேச மைதானத்தில் அவர் விளையாடினார். 






எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் ஆனார்.  அதைத் தொடர்ந்து 2011 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையும், 2013ஆம் ஆண்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் வென்றுத் தந்தார்.


அவர் களத்தில் இறங்கினாலே வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடுவார். அது கிரிக்கெட்டில் மட்டுமல்ல தற்போது டென்னிஸ் போட்டியிலும் தொடர்வது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரசிகர் ஒருவர் தோனி எப்போது கோப்பைகளை வெல்வதை நிறுத்துவார் என்று வேடிக்கையாக கமென்ட் செக்ஷனில் கேள்வி எழுப்பினார். இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த முறையும் சிஎஸ்கே அணியை தலைமை தாங்கி வழிநடத்தவுள்ளார் தோனி. இவரது தலைமையிலான சிஎஸ்கே அணி, 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில்தான் முடிந்தது. இந்த முறை இங்கிலாந்து அணி கோப்பை வென்றது. கிரிக்கெட் ரசிகர்களை அடுத்து மகிழ்விக்க ஐபிஎல் திருவிழா தயாராகிக் கொண்டிருக்கிறது.


கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல்(IPL) தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளூர் மட்டுமின்றி சர்வதேச நட்சத்திர வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால், இதன் வியாபாரமும் பன்மடங்கு விரிவடைந்து, நாட்டின் பெரும் விளையாட்டு திருவிழாவாகவே ஐபிஎல் மாறியுள்ளது.


முதலில் 8 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில், கடந்த ஆண்டு புதியதாக குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இணைந்தன. அதிகபட்சமாக மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன.