டி20 உலகக்கோப்பை வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருகிறது. இந்த நிலையில், உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி அறிவிப்பு:
இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பார்ஸ்டோ, ஹாரி ப்ரூக், சாம் கரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜேக்ஸ், கிறிஸ் ஜோர்டன், லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், பில் சால்ட், டோப்ளே, மார்க் வுட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில், இங்கிலாந்து அணி அந்த தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்பவும், சமீபகால வீரர்களின் செயல்பாடு அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
நடப்பு சாம்பியன் என்ற பட்டத்தை தன்வசம் வைத்துள்ள இங்கிலாந்து, தற்போது நடக்கும் உலகக்கோப்பைத் தொடரையும் வெல்லும் வகையில் பேட்டிங், பவுலிங் பலத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பேட்ஸ்மேன்கள்:
அணியின் பிரதான பேட்ஸ்மேன்களாக பட்லர், ஜானி பார்ஸ்டோ, ஹாரி ப்ரூக், பென் டக்கெட், வில் ஜேக்ஸ், லிவிங்ஸ்டன், பில் சால்ட் மற்றும் மொயின் அலி உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள்:
சாம் கரன், டாம் ஹார்ட்லி, ஜோர்டன், டோப்ளி, மார்க் வுட், அடில் ரஷீத் ஆகியோர் பிரதான பந்துவீச்சாளர்கள் ஆவார்கள்.
ஆல் ரவுண்டர்கள்:
இங்கிலாந்து அணியின் முதன்மையான ஆல் ரவுண்டராக மொயின் அலி, சாம் கரன் இடம்பிடித்துள்ளார். இவர்களுடன் வில் ஜேக்ஸ், லிவிங்ஸ்டன் பவுலிங்கிலும் அசத்தக்கூடியவர்கள். அடில் ரஷீத்தும் பேட்டிங்கிலும் அசத்தக்கூடியவர்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை நடப்பு ஐ.பி.எல். தொடரில் அசத்தலாகவே ஆடி வருகின்றனர். ஜோஸ் பட்லர், ஜானி பார்ஸ்டோ, வில் ஜேக்ஸ் ஆகியோர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் சதம் அடித்து அசத்தியுள்ளனர். இதனால், இவர்கள் உலகக்கோப்பைத் தொடரிலும் அசத்தலாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளமையும், அனுபவமும் கலந்த அணியாக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து வீரர்கள் விரைவில் தங்களது பயிற்சியைத் தொடங்க உள்ளனர். இங்கிலாந்து அணியில் இடம்பிடித்து தற்போது ஐ.பி.எல். தொடரில் ஆடி வரும் இங்கிலாந்து வீரர்கள் ப்ளே ஆஃப்க்கு பிறகு ஐ.பி.எல், தொடரில் ஆட மாட்டார்கள் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: India T20 World Cup Squad: இளம் வீரர்களுக்கு வாய்ப்பு; டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!