நடப்பு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமியின் தாயார் அஞ்சும் ஆரா, நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.


உலகக் கோப்பை:


கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் பத்து அணிகள் பங்குபெற்றன. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (நவம்பர் 19) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி. இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பையை 6 வது முறையாக வென்ற அணி என்ற பெருமையை ஆஸ்திரேலிய அணி பெற்றது. 


முன்னதாக, நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை உற்சாகப்படுத்த பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா,  உள்ளிட்டோர் மைதானத்திற்கு நேரடியாக வந்தனர். முக்கியமாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்  ரிச்சர்டு சார்லஸ் ஆகியோரும் கலந்து கொண்டு மைதனத்தில் இருந்தபடி ஆட்டத்தை பார்த்தனர். 


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷமியின் தாயார்:


இச்சூழலில், இந்த தொடரில் தன்னுடைய பந்து வீச்சால் எதிரணி வீரர்களை மிரட்டிய முகமது ஷமியின் தாயார் அஞ்சும் ஆரா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு இறுதிப் போட்டி நடைபெற்ற அன்று  தலை சுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருக்கிறார்.


அதனால் தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.  ஆனால், முகமது ஷமியின் மூத்த சகோதரர் ஹசீப் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.


முன்னதாக, இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் முகமது ஷமி. அதன்படி, நடப்பு உலகக் கோப்பை தொடரில்  24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதோடு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற ஜாகீர் கானின் சதனையையும் இந்த உலகக் கோப்பை தொடரின் மூலம் முறியடித்தார் முகமது ஷமி. 


மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுகள், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள், இலங்கை அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகள் என தொடர் முழுவதும் பந்துவீச்சில் கலக்கினர் முகமது ஷமி.


இதில் அதிகபட்சமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: Mohammed Shami: இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் அதிக விக்கெட்கள்.. எதிரணியை மிரள வைத்த முகமது ஷமி..!


 


மேலும் படிக்க: BCCI Kapil Dev: உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய கேப்டன்! கபில் தேவை வெறுக்கிறதா பிசிசிஐ? மறந்ததன் பின்னணி என்ன?