ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில், இந்திய அணியின் கேப்டன் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினார்.  31 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என மொத்தம் 47 ரன்கள் குவித்தார். அதேபோல், விராட் கோலியும் 54 ரன்கள் எடுக்க அடுத்து வந்த ஷ்ரேயாஸ் உடனே விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் , வந்த கே.எல்.ராகுல் 107 பந்துகள் களத்தில் நின்று 66 ரன்கள் எடுக்க, அடுத்து வந்த வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் குவித்தது.

 அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்து 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

உலகக் கோப்பை லீக்கில் இந்திய அணிக்காக முதல் நான்கு போட்டிகளில் விளையாடாத முகமது ஷமி, அடுத்தடுத்த போட்டிகளில் களமிறங்கி மூன்று முறை 5 விக்கெட்களும், ஒரு முறை 4 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். 

அதிக விக்கெட்டுகள் எடுத்த முகமது ஷமி:

இந்த தொடரில் சிறப்பாக தன்னுடைய பங்களிப்பை வெளிப்படுத்தி வந்தார் இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி (Mohammed Shami). தன்னுடைய பந்து வீச்சால் எதிரணி வீரர்களை மிரள வைத்தார்.
 
அதன்படி, அவர் நடப்பு உலகக் கோப்பையில் 7 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.  முன்னதாக, கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமாக பந்து வீசினார் முகமது ஷமி.

அந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய ஷமி 54 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7 ஓவர்கள் வீசி 2 ஓவர்களை மெய்டன் செய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷமி.  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகள், நவம்பர் 15 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற   அரையிறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் எடுத்தார். அதேபோல், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட் எடுத்துள்ளார். 

இந்த சூழலில், ஒட்டுமொத்தமாக 2023 உலகக் கோப்பையில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகக் கோப்பை 2023 போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை 2023ல் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:

பந்து வீச்சாளர்கள் போட்டிகளில் விக்கெட்டுகள் எகானமி சராசரி சிறந்த பந்துவீச்சு
முகமது ஷமி (IND) 7 24 5.26 10.70 7/57
ஆடம் ஜம்பா (AUS) 11 23 5.36 22.39 4/8
தில்ஷான் மதுஷங்க (SL) 9 21 6.70 25.00 5/80
ஜஸ்பிரித் பும்ரா (IND) 11 20 4.06 18.65 4/39
ஜெரால்ட் கோட்ஸி (SA) 8 20 6.23 19.80 4/44
ஷஹீன் அப்ரிடி (PAK) 9 18 5.93 26.72 5/54
மார்கோ ஜான்சன் (SA) 9 17 6.52 26.47 3/31
ரவீந்திர ஜடேஜா (IND) 11 16 4.25 24.87 5/33
ஜோஷ் ஹேசில்வுட் (AUS) 11 16 4.81 28.06 3/38
மிட்செல் சான்ட்னர் (NZ) 10 16 4.84 28.06 5/59