BCCI Kapil Dev: இந்திய அணிக்காக முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவிற்கு, பிசிசிஐ உரிய மரியாதை வழங்கவில்லை என்ற பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.


கபில் தேவ் எனும் நாயகன்: 


1983ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்கு புறப்பட்டபோதே, லீக் சுற்று முடிந்ததுமே நாடு திரும்புவதற்கான டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. காரணம், இந்திய அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாது என்று தான் பெரும்பாலானோர் நம்பியிருந்தனர். ஆனால், அந்த ஒட்டுமொத்த எதிர்மறை நம்பிக்கையையும் தவிடுபொடியாக்கினார், அப்போதைய இந்திய அணியின் கேப்டனான ஆல்ரவுண்டர் கபில் தேவ். இறுதிப்போட்டியில் வெறும் 183 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்க்க, அசுர பலம் கொண்ட மேற்கிந்திய தீவுகள் இந்த இலக்கை அநாயசமாக எட்டும் என பலரும் கணித்தனர்.  ஆனால், கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி பந்துவீச்சாளர்கள், களத்தில் அதகளம் செய்தனர். வலுவான மேற்கிந்திய தீவுகளின் பேட்டிங் லைன் - அப்பை நிலை குலைய செய்து 140 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தனர். இதனால், கபில் தேவ் தலைமையில் இந்திய அணி, தனது முதல் உலகக் கோப்பையை வென்றது.


உரிய அந்தஸ்து கிடைத்ததா?


2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற தோனியை, பிசிசிஐ மட்டுமின்றி ரசிகர்களும் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், யாரும் எதிர்பாராத நேரத்தில் அதுவும் இங்கிலாந்தில் வைத்து, மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி நாட்டிற்கான முதல் உலகக் கோப்பையை வென்ற கபில் தேவிற்கு சரியான அந்தஸ்து கிடைத்ததா என்றால் இல்லை என்பதே பதில். பல இடங்களில் அவர் வெளிப்படையாகவே, பிசிசிஐ-ஆல் அவமானப்படுத்தப்பட்டார் என்பது தான் உண்மை. அதற்கு முக்கிய காரணம் இன்று பணம் கொட்டும் தொடராக மாறியுள்ள ஐபிஎல்லும் தான். 


ஐசிஎல் டூ ஐபிஎல்:


4 சர்வதேச அணிகள் மற்றும் 9 உள்ளூர் அணிகள் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் லீக் எனப்படும் 20 ஓவர் தொடரை, கபில் தேவ் தலைமையிலான குழு தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து கடந்த 2007ம் ஆண்டு தொடங்கியது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தாலும் பிசிசிஐ அந்த தொடரை அங்கீகரிக்கவில்லை. தொடர்ந்து, கபில்தேவை கடுமையாக விமர்சித்த பிசிசிஐ, அவரை தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்கியது. அந்த ஐசிஎல் தொடர் தான் தற்போது ஐபிஎல் தொடராக உருமாறி, ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாயை பிசிசிஐக்கு வருவாயாக வாரிக் குவித்து வருகிறது.


கபில் தேவை அவமதித்த பிசிசிஐ:


இதனிடையே, ஐசிஎல்  தொடருக்காக கபில் தேவ் தனது ஆதரவுக் குரலை தொடர்ந்து வழங்கி வந்தார். இதன் விளைவாக பல முக்கிய தருணங்களில், கபில் தேவிற்கான மரியாதையை வழங்க பிசிசிஐ மறுத்துள்ளது. உதாரணமாக, முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஒன் - டைம் பேமண்ட் உரிய நேரத்தில் கபில் தேவிற்கு வழங்கப்படவில்லை. 2012ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கவுரவிக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட கபில் தேவை அழைக்கவில்லை. கபில் தேவின் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. சுனில் கவாஸ்கர் பேரில் டெஸ்ட் தொடர் எல்லாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கபில் தேவிற்கு என பிசிசிஐ கொடுத்த அங்கீகாரம் என்று பார்த்தால் எதுவும் இல்லை என்பதே உண்மை. அந்த வரிசையில் தான் நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கும், கபில் தேவிற்கு பிசிசிஐ சார்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனிடையே, இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் செயல்படுவதற்கு எதிராகவும், பல உள்ளடி வேலைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.


கபில் தேவ் செய்யாதது என்ன?


சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு பிசிசிஐ கொடுக்கும் முக்கியத்துவம் என்பது அனைவரும் அறிந்ததே. காரணம், பிசிசிஐ எடுக்கும் முடிவுகளுக்கு எப்போதும் அவர்கள் ஆதரவான நிலைப்பட்டையே எடுக்கின்றனர். ஆனால், கபில் தேவ் அப்படி அல்ல, பின் விளைவுகள் பற்றி எல்லாம் யோசிக்காமல் தனக்கு எது சரி என தோன்றுகிறதோ, அதை சொல்பவர். ஐசிஎல் தொடருக்கு ஆதரவு தெரிவித்ததற்காக கபில் தேவ் மன்னிப்பு கோர வேண்டும் என பிசிசிஐ கருதியது. ஆனால், கபில் தேவ் அதை செய்யாததன் விளைவாக தான், அவருக்கான உரிய அங்கீகாரங்கள் மறுக்கப்படுகின்றன என கூறப்படுகிறது.


கபில்தேவை கொண்டாடும் ரசிகர்கள்:


ஆனால், இந்தியாவிற்காக உலகக் கோப்பையை வென்றதோடு, நாட்டில் இந்த அளவிற்கு கிரிக்கெட் மோகம் அதிகரிக்க காரணமாக இருந்த கபில் தேவை ரசிகர்கள் யாரும் மறக்கவில்லை. பிசிசிஐ உரிய அங்கீகாரம் வழங்காவிட்டாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்படுகிறார் என்றால் அது மிகையல்ல.  அவர் உலகக் கோப்பைக்காக எந்த அளவிற்கு உழைத்தார் என்பதை காட்டும் ஒரு சிறு பகுதியாக தான், 83 என்ற படம் வெளியானது. 


கபில் தேவ் சொல்வது என்ன?


உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைக்கப்படாதது தொடர்பாக பேசிய கபில் தேவ்,அவர்கள் என்னை அழைக்கவில்லை அதனால் நான் செல்லவில்லை. அவ்வளவுதான்.  83 உலகக்கோப்பை அணி முழுவதும் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், அது ஒரு பெரிய நிகழ்வு என்பதாலும், பொறுப்புகளை கையாளுவதில் மக்கள் மிகவும் மும்முரமாக இருப்பதாலும், சில சமயங்களில் அவர்கள் மறந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன்என கபில் தேவ் தெரிவித்து இருந்தார்.