இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு இந்திய திரைப் பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று இந்திய அணியை ஊக்குவித்தனர். நேரில் செல்ல முடியாத பிரபலங்களும் ரசிகர்களும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து இந்திய அணியை சியர் செய்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா அணி வென்றது.


முன்னதாக, கடந்த 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைச் சந்தித்த நிகழ்வு, 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழ்ந்த நிலையில், வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருந்த இந்திய ரசிகர்கள் மனமுடைந்தனர். இதனால் சமூக வலைதளங்களில் நேற்று முதல் ரசிகர்கள் கண்ணீர் மல்க பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பை மீது கால் வைத்து அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை மீது கால் வைத்திருக்கும் மிட்செல் மார்ஷை சமூக ஊடகங்களில் சில இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதே நேரம், அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் மிட்செல் மார்ஷ் மீது குஜராத் காவல் துறையினருக்கு கோவையை சேர்ந்த இளைஞர் புகார் அளித்துள்ளார்.  கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ராகுல் காந்தி, இவர் இந்துஸ்தான் ஜனதா கட்சியின் தென் மண்டல தலைவராக உள்ளார். ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர் மிட்செல் மார்ஷ்க்கு எதிராக குஜராத் காவல் துறைக்கு இமெயில் வாயிலாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து குஜராத் காவல் துறையின் டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்டு பேசியதாகவும், உலகக் கோப்பை மீது கால் வைத்து அவமதித்த மார்ஷ் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையை கீழே வைத்து, அதன் மீது கால் மேல் கால் போட்டு, தெனாவட்டாக அமர்ந்திருந்தது உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள நாடுகளையும், கோப்பையை வழங்கிய இந்தியப் பிரதமரை அவமதிக்கும் செயல் என குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, உலகக்கோப்பையை அவமதித்த மிட்செல் மார்ஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.