இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தானா, 2021-ம் ஆண்டிற்கான ஐசிசி டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், ஐசிசி சார்பில் அந்த ஆண்டிற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருது அளித்து வருகிறது. அந்த வரிசையில், 2021-ம் ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த வீரர் வீராங்கனைகளை தேர்வு செய்யும் முறை நடைபெற்று வருகிறது.
2022 ஜனவரி மாதம் விருது பெறுபவர்களின் விவரம் வெளியிடப்பட்டு, விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில், 2021-ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீராங்கனைக்கான விருதிற்கு இந்தியாவின் ஸ்மிரிதி மந்தானா, இங்கிலாந்தின் டேமி பியுமோண்ட், நாட் சிவர், அயர்லாந்தின் கேபி லூயிஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
2021-ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் ஸ்மிரிதி மந்தானா அசத்தி இருக்கிறார். இந்த ஆண்டு 255 ரன்கள் எடுத்திருக்கும் அவர், 2 அரை சதங்கள் அடித்திருக்கிறார், 31.87 சராசரி வைத்திருக்கிறார். இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில், இந்திய மகளிர் அணிக்கு சுமாராகவே இருந்திருக்கிறது. இந்திய மகளிர் அணி விளையாடிய 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி கண்டது. இந்த சுமாரான சீசனில், ஸ்மிரிதி மந்தானா மட்டுமே ஒரே ஆறுதல். இதனால், ஸ்மிரிதியின் பங்களிப்பிற்காக ஐசிசி விருதுகளுக்கு அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வெற்றியாளர்களை தேர்வு செய்யும் முறை:
சர்வதேச கிரிக்கெட் இதழியளார்கள், கிரிக்கெட் ஒளிபரப்பாளர்கள் என ஒரு தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். மேலும், ஐசிசியின் டிஜிட்டல் தளம் வழியாக ரசிகர்களின் வாக்குகளும், கருத்துகளும் கேட்கப்படுகிறது. இதில் இருந்து முதல் இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனையை வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்