தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான குவிண்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்திருக்கிறார். தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வரலாறு வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் தோல்வியை தழுவியதை அடுத்து குவிண்டன் டி காக் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.


இது குறித்து தென்னாப்ரிக்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டி காக் ஓய்வு பெற இருப்பதை உறுதிபடுத்தி இருக்கிறது. முன்னதாக, டி காக், அவரது மனைவி சாஷா தங்களது குழந்தை பிறப்பிற்காக காத்திருப்பதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென்று அவர் ஓய்வு அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 






”ஓய்வு அறிவிப்பது குறித்த நீண்ட ஆலோசனை மேற்கொண்டேன், அதிக நேரம் எடுத்து கொண்டேன். நானும் என் மனைவி சாஷாவும் எங்களுடைய முதல் குழந்தையை எதிர்ப்பார்த்து இருக்கும் இந்த தருணத்தில் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதை முதன்மையாக வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிப்பவன் நான். தென்னாப்ரிக்காவுக்காக விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்” என டி காக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


29 வயதான டி காக், கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 54 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 3,300 ரன்கள் எடுத்திருக்கிறார்.மேலும், 6 சதங்கள், 22 அரை சதங்கள் அடித்து அசத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில்  221 கேட்சுகள், 11 ஸ்டம்பிங்ஸ் என மொத்தம் 232 விக்கெட்டுகளுக்கு காரணமாக இருந்திருக்கிறார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண