சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது கிரிக்கெட் விதிகளில் சிறிய மாற்றம் செய்து விதிகளை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஐசிசி குழுக் கூட்டத்திற்கு பிறகு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் இந்தாண்டு நடைபெறுள்ள சர்வதேச டி20 தொடர்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அந்த புதிய விதிகளின்படி இனிமேல் மெதுவாக பந்துவீசும் அணிகளுக்கு அந்தப் போட்டியிலேயே ஒரு பெனால்டி விதிக்கும் வகையில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸின் கடைசி ஓவரை குறிப்பிட்ட நேரத்திற்குள் வீச தவறும் பட்சத்தில் அந்த அணிக்கு ஃபில்டிங்கில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுப்பாடுகளின்படி எல்லை கோட்டில் ஃபீல்டிங் நிற்கும் வீரர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்படும். 


அதாவது சர்வதேச டி20 போட்டிகளில் முதல் 6 ஓவர்களில் 3 ஃபீல்டர்கள் மட்டும் எல்லை கோட்டிற்கு அருகே நிற்க முடியும். அதன்பின்னர் 7-20ஆவது ஓவரை 5 பேர் எல்லை கோட்டிற்கு அருகே ஃபில்டிங் செய்யலாம். இனிமேல் தாமதாக ஒரு அணி பந்துவீசும் படசத்தில் எத்தனை ஓவர்கள் தாமதமாக பந்து வீசுகிறதோ அத்தனை ஓவர்களுக்கும் 4 பேர் மட்டுமே எல்லை கோட்டில் நின்று ஃபீல்டிங் செய்ய முடியும். இது பந்துவீசும் அணிக்கு போட்டியின் போதே பெரிய சவாலாக அமையும். 




இத்தனை நாட்களாக ஒரு தாமதமாக ஓவர்கள் வீசும் பட்சத்தில் அந்த அணியின் கேப்டன் மற்றும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அதுவே தொடர்ந்து நடைபெற்றால் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டு வந்தது. இந்த விதிமுறையை தற்போது ஐசிசி மாற்றியுள்ளது. போட்டிக்கு பிறகு விதிக்கப்படும் அபராதத்திற்கு பதிலாக போட்டியின்போதே பெனால்டி என்ற இந்த முறையை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. 


இவை தவிர இரு நாடுகளுக்கு எதிரான சர்வதேச டி20 தொடர்களில் முதல் 10 ஓவருக்கு பிறகு 2.30 நிமிடங்கள் இடைவேளை விடலாம் என்று புதிய விதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைவேளை தொடர்பாக இரு அணிகளும் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை திருத்தங்கள் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் ஆகிய இரண்டிலும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடவர் கிரிக்கெட்டில் வரும் ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து டி20 போட்டியில் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: ''மூன்றாவது டெஸ்டில் அவர் இருப்பார்'' - கோலி குறித்து அப்டேட் கொடுத்த டிராவிட்