ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இங்கிலாந்து அணி 158 ரன்கள் இன்னும் பின்தங்கியுள்ளது. 


இந்நிலையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் போது ஆட்டத்தின் 31ஆவது ஓவரில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. இந்த ஓவரை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேம்ரூன் க்ரீன்ஸ் வீசினார். அப்போது ஒரு பந்தில் பென் ஸ்டோக்ஸ் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் அவுட் கொடுத்தார். இதைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் நடுவரின் முடிவை ரிவ்யூ செய்தார். அப்போது ரிப்ளேவில் பந்து அவருடைய காலில் படவில்லை என்று தெளிவாக தெரிந்தது. 


 






அத்துடன் பந்து ஸ்டெம்பை உரசி கொண்டு சென்றதும் தெளிவாக தெரிந்தது. எனினும் ஸ்டெம்ப் மீது இருந்த பெயில்ஸ் விழவில்லை. இதனால் அவர் அவுட் இல்லை என்று நடுவரின் தீர்ப்பு மாற்றப்பட்டது. இந்த ரீப்ளே களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பல ரசிகர்களும் வியப்புடன் பார்த்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


 






மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்,”ஹிட்டிங் த ஸ்டெம்ப்ஸ் என்ற புதிய விதியை கிரிக்கெட்டில் அறிமுகம் செய்ய வேண்டும். பந்து ஸ்டெம்பில் பட்டுள்ளது. ஆனால் பெயில்ஸ் விழவில்லை. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்போம். இது பற்றி உங்களுடைய கருத்துகள் என்ன?” எனப் பதிவிட்டுள்ளார். 


அதேபோல் இந்திய அணியின் வீரரும் தமிழ்நாடு வீரருமான தினேஷ் கார்த்திக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில்,”உங்களுடைய ஆஃப் ஸ்டெம்ப் தொடர்பாக நீங்கள் உறுதியாக இருக்கும் போதும், உங்களுடைய ஆஃப் ஸ்டெம்ப் உங்கள் மீது உறுதியாக இருக்கும் போதும் இது நடக்கும்” எனப் பதிவிட்டுள்ளார். 


 






இந்த பதிவுகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. 


மேலும் படிக்க: 70 பந்துகளுக்கு டொக்...ஜோ ரூட் டக்...இங்கிலாந்து பரிதாபங்கள்!!