ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளை பெற்று +1.405 என்ற ரன் ரேட்டுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதே போக்கு நிலவினால் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 48-வது சதத்தை பதிவு செய்தார் ரன் மிஷின் விராட் கோலி. மேலும், ஒரு சதம் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வார். அதேபோல், இந்த உலகக் கோப்பை தொடர் முடிவதற்குள் இரண்டு சதங்களை பூர்த்தி செய்தால், உலகிலேயே ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார்.
நெனச்சு கூட பாக்கல:
இச்சூழலில் இது குறித்து விராட் கோலி பேசிகையில், “நான் எனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கும் போது இவ்வளவு ரன்கள் மற்றும் சதங்கள் அடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்தது இல்லை. நான் கிரிக்கெட்டில் எனது பயணத்தை தொடர்வதற்கு கடவுள் என்னை ஆசிர்வதித்துள்ளார். நான் எப்போதும் நிறைய சாதனைகள் செய்ய வேண்டும் என்று நினைப்பேன்.
ஆனால் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அந்த சாதனைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. யாராலும் நாம் என்னென்ன சாதனைகளை செய்ய வேண்டும் என்று திட்டமிட முடியாது. இந்த 12 ஆண்டுகளில் நான் இத்தனை சாதனைகள் செய்வேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எனது ஒரே கவனம் என்னவென்றால் நான் என் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும். கடினமான சூழலிலும் அணியை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று தான் நினைப்பேன்” என்று கூறினார்.
நூறு சதவீத பங்களிப்பு:
தொடர்ந்து பேசிய அவர், “எனக்குள் கிரிக்கெட் மீதான திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக நிறைய மாற்றங்களை செய்தேன். எனக்கான ஒழுக்கமான ஒரு வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டேன். எனக்குள் எப்போதும் ஒரு உந்து சக்தி இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதில் நான் நிபுணத்துவம் பெற்றவன் எல்லாம் கிடையாது. விளையாட்டு தான் என்னுடைய முயற்சிகளை அங்கீகரிக்கிறது.
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டது இதுதான். நான் ஒவ்வொரு முறை மைதானத்தில் விளையாடும்போதும் எனது நூறு சதவீத பங்களிப்பை கொடுத்தே விளையாடி உள்ளேன்” என்று கூறியுள்ளார்
மேலும் படிக்க: PAK vs BAN Match Highlights: ஒரு வழியாக முடிந்த தோல்வி பயணம்.. பாகிஸ்தான் அபார வெற்றி - வங்கதேசம் அவுட்
மேலும் படிக்க: Virat Kohli 49th Century: பிறந்த நாளில் அதை செய்வீங்கனு நம்புறேன்... ரன் மிஷின் கோலியை வாழ்த்திய பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான்!