உலகக் கோப்பை 2023ல் இன்று (நவம்பர் 1) நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. பெரும்பாலும் இந்த மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாகவே இருக்கும். 


தென்னாப்பிரிக்கா 6 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்று, நெதர்லாந்திடம் மட்டும் தோல்வி அடைந்துள்ளது. நியூசிலாந்து இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 2ல் இந்தியாவிடம் (4 விக்கெட் வித்தியாசத்தில்), ஆஸ்திரேலியாவிடம் (5 ரன்கள் வித்தியாசத்தில்) தோல்வியடைந்துள்ளது.


இதுவரை இரு அணிகளும் நேருக்குநேர்: 


நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை 71 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா 41 போட்டிகளிலும், நியூசிலாந்து 25 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 5 போட்டிகளில் முடிவு இல்லை. 


மழைக்கு வாய்ப்பா..? 


புனேவில், போட்டி தொடங்கும் போது வெப்பநிலை 32 டிகிரி வரை அதிகரிக்கும். அது படிப்படியாக குறைந்து ஈரப்பதம் 43% ஆக செல்லும். இருப்பினும், Weather.com படி, மழைக்கு வாய்ப்பு இல்லை. போட்டியின் இறுதிக் கட்டங்களில் 24 டிகிரி செல்சியஸாகக் குறையும். 


உலகக் கோப்பையில் எப்படி..?


ஒருநாள் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மொத்தம் 8 போட்டிகள் நடந்துள்ளன. இதில், நியூசிலாந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 



விளையாடிய மொத்த போட்டிகள்: 8




தென்னாப்பிரிக்கா வென்றது: 2




நியூசிலாந்து வென்றது: 6



இந்த உலகக் கோப்பையின் இரண்டு போட்டிகள் புனேவில் நடைபெற்றன. இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியால் பெரிய ஸ்கோரை எடுக்க முடியவில்லை. இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தான் 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அணி 256 ரன்கள் மட்டுமே எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த இலங்கை மற்றும் இந்திய அணிகள் 3 விக்கெட்கள் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. 


புனே மைதானத்தின் புள்ளி விவரம்: 


புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இதுவரை 9 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி நான்கு முறையும், 5 முறை சேசிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆடுகளத்தில், இந்த 9 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் 300+ ஸ்கோர்கள் செய்யப்பட்டுள்ளன. இங்கு அதிகபட்ச ஸ்கோர் 356 ஆகும். குறைந்தபட்ச மதிப்பெண் 230 ஆக உள்ளது. 


வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக பிட்ச்: 


இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் இதுவரையும், ஒட்டுமொத்தமாகவும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-7 பந்துவீச்சாளர்களில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் கூட இல்லை. பும்ரா, புவனேஷ்வர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். கடந்த போட்டியில் ஃபசல்ஹக் ஃபரூக்கி இந்த மைதானத்தில் வெறும் 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.


கணிக்கப்பட்ட இரு அணிகள்: 


தென்னாப்பிரிக்கா : டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், லுங்கி என்கிடி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி


நியூசிலாந்து : டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட், மேட் ஹென்றி