PAK vs BAN Match Highlights: வங்கதேச அணியை வீழ்த்தியதன் மூலம், பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.


அபாரமான தொடக்கம்:


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.  அதைதொடர்ந்து களமிறங்கிய, பாகிஸ்தான்  தொடக்க வீரர்கள் அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து தந்தனர். அப்துல்லா ஷபிக் மற்றும் ஃபகர் ஜமான் கூட்டணி, வங்கதேசத்தின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் தவித்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைதம் கடந்தனர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷபிக், 68 ரன்கள் சேர்த்து இருந்தபோது மெஹிதி ஹாசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்துல்லா ஷபிக் மற்றும் ஃபகர் ஜமான் கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 128 ரன்களை சேர்த்து, பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.


தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி:


மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஃபகர் ஜமான் சிக்சர் மழை பொழிந்து வாண வேடிக்கை நிகழ்த்தினார். இதனால் ரன் ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. அதேநேரம் கேப்டன் பாபர் அசாம் வெறும் 9 ரன்களை மட்டும் சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த ஃபர் ஜமானும், 81 ரன்கள் சேர்த்து இருந்தபோது, மெஹிதி ஹாசன் பந்துவீச்சில் வெளியேறினார்.


இறுதியில் 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து பாகிஸ்தான் அணி இலக்கை எட்டியது.  தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியுற்று இருந்த பாகிஸ்தான் அணி, இந்த வெற்றியின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. அதேநேரம், தொடர்ந்து 6வது தோல்வியை பதிவு செய்த வங்கதேச அணி, நடப்பு உலகக் கோப்பையில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.


முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:


வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரான தன்ஜித் ஹசின் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே டக்-அவுட் ஆனார். அவரை தொடர்ந்து வந்த ஷாண்டோ  4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்களிலும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால், 23 ரன்களை சேர்ப்பதற்கு 3 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி திணறியது. இதையடுத்து 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - மஹ்மதுல்லா கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை சரிவில் இருந்து மீட்டது.  45 ரன்கள் சேர்த்து லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார்.


தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மஹ்மதுல்லா  56 ரன்களை சேர்த்து வெளியேறினார். ஹிரிதாய் வெறும் 7 ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுக்க,  கேப்டன் ஷகிப் அல் ஹசன் 43 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து மெஹிதி ஹாசன் 25 ரன்களிலும், டஸ்கின் அஹ்மத் 6 ரன்களிலும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 45.1 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.