உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தொடங்கிய இந்த போட்டி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மூன்று வாரங்களை கடந்துள்ள இந்த உலகக் கோப்பை தொடரில் பல்வேறு விதமான சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சில சாதனைகள் இனி வரும் போட்டிகளில் முறியடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி:


சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி இதுவரை மொத்தம் 48 சதங்கள் குவித்துள்ளார்.  287 போட்டிகள் விளையாடி உள்ள அவர், 13437 ரன்கள் எடுத்துள்ளார். இச்சூழலில், தான் இந்த உலகக் கோப்பை முடிவதற்குள் 50 வது சதத்தை கடந்து விடுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.


அதேபோல், அவர் இந்த உலகக் கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வருகிறார்.


முன்னதாக, கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


இதனிடையே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 116 பந்துகளில் 85 ரன்கள் அடித்தார்.  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 56 பந்துகளில் 56* ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 16 ரன்களும் எடுத்தார்.


வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 97 பந்துகளில் 103 ரன்களை குவித்தார்.


அதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில்ல், 104 பந்துகளில் 95 ரன்களை அடித்தார். 


வாழ்த்து கூறிய ரிஸ்வான்:


இச்சூழலில் தான் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அன்று 35- வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார் ரன் மிஷின் விராட் கோலி.  


அவரது பிறந்த நாள் அன்று நடைபெறும் 36 வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. முன்னதாக, நவம்பர் 2 ஆம் தேதி தொடர் தோல்விகளை பெற்று அரையிறுதிக்கு செல்வதற்கான  தகுதியை இழந்த இலங்கை அணியுடன் மோதுகிறது இந்தியா.


இந்நிலையில் தான் இனி வரும் போட்டிகளில்  சதங்கள் அடித்து அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் முகமது ரிஸ்வான்.


இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் பேசுகையில், “ நவம்பர் 5 ஆம் தேதி அன்று விராட் கோலிக்கு பிறந்த நாள் என்பதை அறிவத எனக்கு நன்றாக இருக்கிறது. அவருக்கு முன்னதாகவே நான் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


பொதுவாக நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதில்லை.  ஏனென்றால் எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால், இந்த முறை கோலியின் பிறந்த நாள் சிறப்பான நாளாக அமைய நான் வாழ்த்துகின்றேன். குறிப்பாக அவர் தன்னுடைய பிறந்த நாளில் 49-வது ஒருநாள் சதத்தை அடிப்பார் என்று நம்புகிறேன். மேலும் இந்த உலகக் கோப்பையில் அவர் 50-வது சதத்தை அடிக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான்.


முன்னதாக , கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன்,  ”உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் விராட் கோலி தன்னுடைய 50 வது சதத்தை அடிப்பார்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Watch Video: ’அன்று’ தலையில் அடித்துக்கொண்ட கோலி... ’இன்று’ ஷோஃபாவில் குத்து விட்டார்- இணையத்தில் வீடியோ வைரல்!